19.03.2025 – சென்னை
அ.தி.மு.க., ஆட்சியில் நிறுவப்பட்ட, தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம், தற்போது மூடுவிழா கண்டுள்ளது. இதன் வாயிலாக, அரசு வேலை வேண்டி காத்திருக்கும் இளைஞர்கள் எதிர்காலத்தை அழிக்கும் பணியை, தி.மு.க., அரசு மேற்கொண்டு வருவது கண்டனத்திற்குரியது’ என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக வனத் துறையின் கீழ் உள்ள வனவர், வனக்காப்பாளர் உள்ளிட்ட பதவிகளில், காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், 2012ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியி-ன்போது, ‘தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம்’ உருவாக்கப்பட்டது.
ஆனால், தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் வாயிலாக, எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. மாறாக, வனக் காப்பாளர் உள்ளிட்ட, 1,161 பணியிடங்கள், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ், நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு ஜன., 30ம் தேதி வெளியானது. இதற்கான தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியான நிலையில், தற்போது வரை பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன.
இதன் வாயிலாக, அ.தி.மு.க., ஆட்சியில் நிறுவப்பட்ட, இக்குழுமத்திற்கு மூடு விழா நடத்த, தி.மு.க., முடிவெடுத்திருப்பது உறுதியாகி உள்ளது. இதன் வாயிலாக, அழிக்கும் பணியை, தி.மு.க. அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனால் அரசு பணி வேண்டி காத்திருக்கும் இளைஞர்கள் எதிர்காலம் அழிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.