
08.04.2025 – கீவ்
உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா, அந்நாட்டின் கணிசமான நிலப்பரப்பை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளது. பல்வேறு பகுதிகள் மீது தொடர்ந்து தாக்குதலும் நடத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த போரில் ரஷ்ய ராணுவம் சார்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கூலிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நீண்ட காலமாக புகார் உள்ளது.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு தேடுவோரை ஏமாற்றி அழைத்து வந்து போரில் ஈடுபடுத்துவதாகவும் ரஷ்யா மீது குற்றச்சாட்டு உள்ளது.ஆனால், ரஷ்யாவின் கூட்டாளி நாடுகளான வடகொரியா, சீனா, பெலாரஸ் போன்ற நாடுகள், தெரிந்தே ரஷ்ய ராணுவத்துக்கு ஆட்கள் சப்ளை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் ரஷ்யா ராணுவத்துக்காக போரிட்ட சீனர்கள் இருவரை உக்ரைன் ராணுவம் கைது செய்துள்ளது.
இதை அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.ஐநா பாதுகாப்பு சபையின் பொறுப்புள்ள நிரந்தர உறுப்பினர் என்ற நம்பகத்தன்மையை இழக்கும் வகையில் இந்த செயல்பாடு அமைந்துள்ளது. இது தொடர்பாக சீன அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பகிரவும்: