09.04.2025 – சென்னை
அவரது அறிக்கை
ஆட்சிக்கு வருவதற்காக பெரும் பொய்; ஆட்சிக்கு வந்ததும், அதை விட பெரிய பொய் என்பது, தி.மு.க., தலைமையின் அறமற்ற அரசியல். ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக, நுாற்றுக்கணக்கான பொய்களின் பட்டியலை, தேர்தல் அறிக்கையாக வெளியிட்டது. அதில் ஒன்று தான், ‘நீட்’ தேர்வை ரத்து செய்யும் முயற்சி என்ற அறிவிப்பு. அத்துடன் தேர்தல் களத்தில், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் இருப்பதாகக் கூறி மோசடி பிரசாரம் செய்தது.
ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வை நீக்கும் அதிகாரம், மாநில அரசுக்கு இல்லை. மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ளது எனக் கூறி தப்பித்தனர். பொய்களாலும், மோசடிகளாலும், மக்களை ஏமாற்றி, நான்கு ஆண்டுகளாக தப்பித்தவர்கள், 2026 தேர்தல் நெருங்குவதால், மீண்டும் ‘நீட்’ போராட்டம் முடிந்து விடவில்லை என முழங்குகின்றனர்.
இயலாமையை மறைக்க, எல்லாவற்றுக்கும் அனைத்து சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டம், சட்டசபையில் தீர்மானம் என, மக்களை ஏமாற்றுவது தான் தி.மு.க., தலைமையின் தொன்று தொட்ட வழக்கம். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் கைவசம் இருக்கிறது என்றவர்கள் தற்போது, ஆலோசனை கேட்பது ஏமாற்று ஆலாபனை அன்றி வேறென்ன.
இதுவரை, மாணவர்கள் மற்றும் மக்களை ஏமாற்றிய தி.மு.க., தலைமை, மக்கள் மன்றத்தில், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.