
10.04.2025 - ஆமதாபாத்
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் குஜராத், ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
சுதர்சன் அபாரம்: குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மன் கில் (2) ஏமாற்றினார். பின் இணைந்த சாய் சுதர்சன், பட்லர் ஜோடி நம்பிக்கை தந்தது. துஷார் தேஷ்பாண்டே வீசிய 5வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விரட்டினார் சுதர்சன்.
மறுமுனையில் அசத்திய பட்லர், பரூக்கி, மகேஷ் தீக் ஷனா ஓவரில் தலா 2 பவுண்டரி அடித்தார். பொறுப்பாக ஆடிய சுதர்சன், 32 பந்தில் அரைசதம் எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்த போது தீக் ஷனா பந்தில் பட்லர் (36) அவுட்டானார்.
ஷாருக்கான் நம்பிக்கை: பரூக்கி வீசிய 12வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி விரட்டிய ஷாருக்கான், ஷாருக்கான், தீக் ஷனா வீசிய 14வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விரட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்த போது தீக் ஷனா ‘சுழலில்’ ஷாருக்கான் (36) சிக்கினார்.
சுதர்சன் 82 ரன்னில் (3 சிக்சர், 8 பவுண்டரி) ஆட்டமிழந்தார். ரஷித் கான் (12) நிலைக்கவில்லை. சந்தீப் சர்மா வீசிய 20வது ஓவரில் அசத்திய ராகுல் திவாதியா, ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார்.
குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 217 ரன் எடுத்தது. திவாதியா (24) அவுட்டாகாமல் இருந்தார்.
சாம்சன் ஆறுதல்: கடின இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (6), நிதிஷ் ராணா (1) ஏமாற்றினர். பின் இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஜோடி ஓரளவு கைகொடுத்தது. அர்ஷத் கான் வீசிய 4வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார் சாம்சன். முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா பந்தில் சிக்சர் விளாசினார் பராக். மூன்றாவது விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்த போது கெஜ்ரோலியா பந்தில் பராக் (26) அவுட்டானார். ரஷித் கான் ‘சுழலில்’ துருவ் ஜூரெல் (5) சிக்கினார். அடுத்து வந்த ஹெட்மயர், ரஷித் கான் வீசிய அடுத்தடுத்த ஓவரில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார்.
ஹெட்மயர் அரைசதம்: பொறுப்பாக ஆடிய சாம்சன் 41 ரன்னில் (2 சிக்சர், 4 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய ஹெட்மயர், 29 பந்தில் அரைசதம் கடந்தார். பிரசித் கிருஷ்ணா வீசிய 16வது ஓவரில் ஜோப்ரா ஆர்ச்சர் (4), ஹெட்மயர் (52) அவுட்டாகினர். சாய் கிஷோர் ‘சுழலில்’ தேஷ்பாண்டே (3), தீக் ஷனா (3) சிக்கினர்.
ராஜஸ்தான் அணி 19.2 ஓவரில் 159 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’டாகி தோல்வியடைந்தது. சந்தீப் சர்மா (6) அவுட்டாகாமல் இருந்தார்.
இரண்டாவது இடம்
பிரிமியர் லீக் அரங்கில் விளையாடிய முதல் 30 இன்னிங்சில், அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார் சாய் சுதர்சன். இவர், 1307 ரன் எடுத்துள்ளார். முதலிடத்தில் ஷான் மார்ஷ் (1338 ரன்) உள்ளார்.
சாம்சன் ‘300’
ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், நேற்று தனது 300வது ‘டி-20’ போட்டியில் பங்கேற்றார்.
ஆறாவது வெற்றி
பிரிமியர் லீக் அரங்கில் குஜராத் அணி, ராஜஸ்தானுக்கு எதிராக 6வது வெற்றியை பதிவு செய்தது. இவ்விரு அணிகள் மோதிய 7 போட்டியில், குஜராத் 6, ராஜஸ்தான் ஒரு போட்டியில் வென்றன.
பகிரவும்: