
20.04.2025 – வாஷிங்டன்
உலக நாடுகள் மீது வரி போரை அமெரிக்கா நடத்தி வருகிறது. சீனாவுக்கு, அதிகளவு வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
இதற்கிடையே, வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே பேச்சு நடந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு, நிர்வாக சீர்திருத்தம் தொடர்பான ஆலோசனை வழங்கி வரும் தொழிலதிபர் எலான் மஸ்க், பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று முன்தினம் தொலைபேசி வாயிலாக பேசினார்.
கடந்தாண்டு பிப்ரவரியில், மோடி அமெரிக்கா சென்றபோது, எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார்.
எலான் மஸ்கின், மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான, ‘டெஸ்லா’ மற்றும் செயற்கைக்கோள் வாயிலாக இன்டர்நெட் சேவை வழங்கும், ‘ஸ்டார்லிங்க்’ ஆகியவை இந்தியாவில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன.
இது தொடர்பாக, இருவரும் பேசியதாக, தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘பிரதமர் மோடியுடன் பேசும் கவுரவம் கிடைத்தது. இந்தாண்டில் இந்தியாவுக்கு நிச்சயம் வருகிறேன்’ என, எலான் மஸ்க் கூறியுள்ளார்.
கடந்தாண்டே அவர் இந்தியா வருவதாக இருந்தது. ஆனால், பணிச்சுமையால் அதை ஒத்திவைப்பதாக கூறியிருந்தார். அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடக்கும் நிலையில், எலான் மஸ்க், பிரதமர் மோடியுடன் பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பகிரவும்: