
21.04.2025 – மும்பை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம், குடியேற்றம் தொடர்பாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிப்பதுடன், முறையான ஆவணங்கள் இல்லாதவர்களை வெளியேற்றி வருகிறது.
அமெரிக்காவில் அதிகளவில் இந்தியர்கள் வசிக்கின்றனர். அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர் எண்ணிக்கையில், இரண்டாவது இடத்தில் இந்தியர்கள் உள்ளனர். அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள், ஏப்., – மே மாதங்களில் இந்தியாவுக்கு வருவர். அதுபோல, அமெரிக்காவுக்கு இங்கிருந்து பயணம் செய்வர். இதைத் தவிர, அதிக எண்ணிக்கையில் மாணவர்களும், படிப்பதற்காக அமெரிக்கா செல்வர்.
கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது, இந்தாண்டு ஏப்., – மே மாதங்களுக்கான முன்பதிவு குறைவாகவே உள்ளது. இதனால், டில்லியில் இருந்து அமெரிக்காவுக்கு செல்வதற்கான விமான கட்டணம், 15 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து நியூயார்க் செல்வதற்கான ஒருவழி பயணக் கட்டணம், 37,000 ரூபாயாக உள்ளது. இருவழி பயணக் கட்டணம், 76,000 ரூபாயாக உள்ளது. டில்லி, மும்பை போன்ற நகரங்களில் இருந்து அமெரிக்காவின் முக்கிய நகரங்களுக்கான ஏப்., – ஜூன் காலத்துக்கான பயணக் கட்டணம், 8 சதவீதம் வரை குறைந்துள்ளதாக, பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டு ஜன., - பிப்., மாதங்களிலும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கட்டணம் குறைவாக இருந்ததாக அவர்கள் தெரிவித்துஉள்ளனர்.
பகிரவும்: