அமிழ்து
www.amizhthu.com
  • News in ENGLISH
  • தமிழீழம்
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • நாட்காட்டி
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு
  • 0
Category:

முதன்மை செய்திகள்

தமிழகம்

திமுக அமைச்சர் நேரு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

by Amizhthu 17 December 2025
written by Amizhthu

தி.மு.க.,வைச் சேர்ந்த, அமைச்சர் நேரு கட்டுப்பாட்டில் உள்ள, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், கடந்த 2024- – 25ம் ஆண்டுகளில் உதவி, இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட, 2,538 பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

ஒரு பதவிக்கு, 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை என, மொத்தம் 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளது என்பதால், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யக் கோரி, தமிழக டி.ஜி.பி.,க்கு, கடந்த அக்டோபரில் அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில், இது தொடர்பாக தலைமைச் செயலரிடம் உரிய அனுமதிகளை பெற்று, வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டி.ஜி.பி.,க்கு உத்தரவிட கோரி, மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, தமிழக அரசு, டி.ஜி.பி., மற்றும் அமலாக்கத் துறை, ஜனவரி 23ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு உள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
17 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இந்த வருடத்தின் கடந்த 9 மாதங்களில் இலங்கையில் 600க்கும் மேற்பட்ட புதிய எச்.ஐ.வி(HIV) தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன; 13 இறப்புகள்.

by Amizhthu 17 December 2025
written by Amizhthu

நாளாந்தம் அடையாளம் காணப்படும் புதிய எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துக் செல்வதுடன், இலங்கையின் எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி தொடர்பான தரவுகளுக்கமைய இவ்வருடத்தில் கடந்த 9 மாதங்களில் மாத்திரம் 600 க்கும் மேற்பட்ட புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 13 பேர் இதனால் உயிரிழந்துள்ளதாக தேசிய பாலியல் பால்வினை நோய்கள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அடையாளம் காணப்படும் புதிய எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை கவலைக்கிடமான வகையில் வெகுவாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் இலங்கையின் எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி தொடர்பான தரவுகளுக்கமைய இவ்வருடத்தில் கடந்த 9 மாதங்களில் மாத்திரம் 600 க்கும் அதிக எண்ணிக்கையிலான புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். நோய்த் தொற்றுக் காரணமாக 13 உயிரிழப்புகளும் சம்பவித்துள்ளன. கடந்த வருடம் முதல் ஒன்பது மாதங்களில் 605 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் கண்டறியப்பட்டிருந்தனர்.

அந்தவகையில் 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இவ்வருடம் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், கண்டறியப்பட்டுள்ள நோயாளர்களில் 15 தொடக்கம் 24 வயதுக்கு உட்பட்ட 68 ஆண்களும் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஏனையத் தொற்றாளர்கள் 25 வயதுக்கும் மேற்பட்டவர்களாவர். இந்த ஆண்டு பதிவாகியுள்ள ஆண் மற்றும் பெண் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆறுக்கு ஒன்றாக காணப்படுவதாக தேசிய பாலியல் பால்வினை நோய்கள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
17 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

”விஜயை பார்த்து திமுகவினர் பயப்படுகின்றனர்.” – அண்ணாமலை.

by Amizhthu 17 December 2025
written by Amizhthu

புதுச்சேரியில் அவர் அளித்த பேட்டி: 

திமுக அரசு, ஒவ்வொரு முருக பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். எல்லா தூண்களிலும் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்கவில்லை. தீபத்தூணில் மட்டுமே ஏற்ற வேண்டும் என் கேட்கிறோம்.நிச்சயமாக தமிழக அரசியலில் இது எதிரொலிக்கும். இங்கு, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு யாரும் எதிரானவர்கள் கிடையாது. ஹிந்துக்களின் உணர்வை காயப்படுத்துவதை தட்டிக் கேட்கிறோம்.

மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு முதலில் காந்தி பெயர் வைக்கப்படவில்லை. 2008 ல் தான் வைக்கப்பட்டது. காங்கிரஸ் கபடநாடகம் போடக்கூடாது. எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டும். மஹாத்மா காந்தி மீது பெரிய மரியாதை உள்ள தலைவர் பிரதமர் மோடி மட்டுமே. தற்போது இந்த திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். திமுக வாக்குறுதி அளித்தும், வேலைவாய்ப்பு திட்டத்தின் நாட்களை அதிகரிக்கவில்லை. வாக்குறுதி அளிக்காமல் நாங்கள் அதிகரித்துள்ளோம்.

உறுதி – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக கையெழுத்து போடாத எம்பிக்கள் அனைவரும் முருக பக்தர்கள். சிவ பக்தர்கள் தான். ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு இந்திய அளவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆதரவு அளிக்கின்றனர். கையெழுத்து போட்ட 120 எம்பிக்கள் அனைத்து எம்பிக்கள் தோற்பது உறுதி.

மவுனம் ஏன் – கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருக்க வேண்டும் என சொன்னது விஜய். அரசியலில் அப்படி இருக்க முடியுமா? விஜய் கம்முன்னு இருங்க. கும்முனு இருங்க. பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும். இவ்வளவு பிரச்னை நடக்குது பேச மாட்டேன். கம்முனு இருந்தால் மக்கள் எப்படி ஓட்டுப்போடுவார்கள். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பேச வே மாட்டேன் என்றால்அது எந்த மாதிரியான அரசியல். புதுச்சேரிக்கு வந்த விஜய், அன்றைக்கு சிறுபான்மையினர் என பேசினார். திருப்பரங்குன்றத்தில் பெரும்பான்மையினருக்காக ஏன் பேசவில்லை . பெரும்பான்மையினர் துன்பத்தில் இருக்கும்போது ஏன் பேசவில்லை.

திமுக வரலாறு – ஸ்டாலின் முதல் தேர்தலிலேயே தோல்வியடைந்துள்ளார். தோல்வி குறித்து அவர் பாடம் எடுக்க வேண்டாம். 1949 ல் உருவான திமுக போட்டியிட்ட தேர்தலை கணக்கில் எடுத்துக் கொண்டால், திமுகவை போன்ற கட்சி இந்திய அரசியலில் கிடையாது. வரலாறு காணாததோல்வியை வெற்றி பெற்றுவிட்டனர். இந்ததேர்தலில் வெற்றி பெற்று விட்டது என்பதற்காக மரத்தில் மீது இருந்து கூவ வேண்டாம். 2026 ல் மக்கள் இறக்கப் போகிறார்கள்.

இருண்ட உலகத்தில் – திமுகவினருக்கு வேல்-ஐ பார்த்தால் பயம். சிவனை பார்த்தால் பயம். பாஜ, இந்து முன்னணியை பார்த்தால் பயம்.யாரை பார்த்தாலும் பயம். பொட்டு வைத்தாலும் குஙகுமத்தை பார்த்தாலும் பயம்.

அரண்டவனுக்கு இருண்டது எல்லாம் பயம். குன்றை பார்த்தால் பயம் . விஜயை பார்த்தால் அவர்களுக்கு பயம். அதனால் அரண்டு போய் கிடக்கிறார்கள். இருண்ட உலகத்தில் வாழ்கிறார்கள். அனைத்தையும் பார்த்தும் பயப்படுகிறார்கள்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

வாழ்வியல் முறை – முன்னதாக புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலை பேசியதாவது: எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் இஸ்லாமிய, கிறிஸ்தவ நண்பர்களும் புரிந்து கொள்ள வேண்டும். குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம். இதில் மாற்றுக்கருத்து இல்லை. ஹிந்து வாழ்வியல் முறை அடிப்படையில் அப்படி தான் வடிவமைக்கப்பட்டது. இதனை யாரும் தோற்றுவிக்கவில்லை. ஆண்டாண்டு காலமாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த வாழ்வியல் முறை உள்ளது. குன்று இருந்தால் அது குமரன் இருக்கும் இடம்.

ஐதீகம் – ஆண்டாண்டு காலமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இஸ்லாம், கிறிஸ்து மதம் தோன்றுவதற்கு முன்பு குன்றில் தீபம் ஏற்றுவது என்பது நமது வழக்கம். குன்றில் கீழே யாரும் தீபம் ஏற்றுவார்களா? யாரும் பார்க்க முடியாது. உச்சியில் தீபம் ஏற்றினால் மட்டும் தான் வீட்டில் இருந்தவர்கள் அதை பார்த்த வீட்டில் ஏற்றுவார்கள். அதுதான் ஐதீகம். குன்று உச்சியில் தீபம் ஏற்றும் ஐதீகம் எதற்கு வந்தது என்றால், அங்கு தீபத்தை ஏற்றினால் தான் 10 – 50 கிமீ தொலைவில் இருக்கும் மகளிர், பெண்கள், தாய்மார்களுக்கும் தெரியும். கோவிலில் தீபம் ஏற்றிவிட்டனர். நாமும் நம்முடைய வீட்டில் ஏற்ற வேண்டும். அதன் பிறகு தீபம் ஏற்றுவர் . இதுதான் நடைமுறை ஐதீகம். விஞ்ஞானம். இதில் விவாதத்துக்கு ஒன்றும்இல்லை

உளறல் – தீபம் ஏற்றுவதற்கு தீபத்தூண் வைக்காமல் எதற்கு வைத்துள்ளனர் என திமுக அரசு, அறநிலையத்துறையிடம் கேட்கிறேன். போட்டோ எடுக்கவா வைத்துள்ளனர்.இத்தனை காலமாக அது தீபத்தூண் அல்ல. ஆங்கிலேயர்களின் சர்வே கல் . அதை வைத்து அளந்தனர் என திமுக கூறியது. நேற்று முதல் புதிதாக இன்னொன்றை கிளப்பியுள்ளனர். அது சர்வே கல் இல்லை. சமணர் காலத்தில் இருந்த கல்.

சமணர் காலத்தில் எதற்கு கல் இருந்தது என திமுகவினரிடம் கேட்டால், அதற்கு அவர்கள் ‘ அந்தக் காலத்தில் படிக்க முடியாது என்பதால், கல் மீது தீபம் ஏற்றி கீழே அமர்ந்து படிப்பார்கள்’ என்கின்றனர். அப்படி யாராவது படித்து பார்த்துள்ளோமா?தினமும் ஒரு பொய்யை சொல்லி அவர்களின் வாதத்தை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக தினமும் உளறிக் கொண்டுள்ளனர். முட்டாள்தனமான பொய் என்பது உளறல் என்பது அர்த்தம். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
17 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

“சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு அழுத்தம் வழங்குங்கள்.” – தமிழகத் தலைவர்களிடம் நேரடியாக வலியுறுத்தவுள்ள தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள்.

by Amizhthu 17 December 2025
written by Amizhthu

தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ண உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை வழங்குமாறு வலியுறுத்தி தமிழக அரசியல் தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுப்பதற்காகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினர் சென்னையை சென்றடைந்துள்ளனர்.

சென்னையை சென்றடைந்துள்ள குழுவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், க.சுகாஷ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் ந.காண்டீபன் ஆகியோர் அடங்குகின்றனர்.

இவ்விஜயம் தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கூறியிருப்பதாவது,

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு ‘ஏக்கிய இராச்சிய’ அரசியலமைப்பினைத் திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதனைத் தடுத்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ண உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் பிரயோகிக்கவேண்டும்.

அந்தவகையில் பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசு இவ்விடயத்தில் இலங்கை மீது வலுவான அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டும். அந்த நிலையை ஏற்படுத்துவதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் இணைந்து குரலெழுப்பவேண்டிய அவசரத்தேவை எழுந்துள்ளது.

இந்நோக்கத்துக்காக இவ்வாரம் சென்னைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து, இவ்விடயங்கள் குறித்துத் தெளிவுபடுத்தவுள்ளோம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
17 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இந்தியா

‘மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் பெயரை, ‘விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம்’ என மாற்றுவதை ஏற்க முடியாது.

by Amizhthu 17 December 2025
written by Amizhthu

இந்திய தேசத் தந்தை காந்தியின் பெயரை நீக்கும் நடவடிக்கை, அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது’ என, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் இறங்கியதால், லோக்சபாவில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

பார்லி., குளிர் கால கூட்டத்தொடர் முடிவடைய, இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், முக்கிய மசோதாக்களை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. குறிப்பாக, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை, ‘விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம்’ என, மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, 100 வேலை நாட்கள் என்பது, 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் நிதி பங்களிப்பு, 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம் – 2025 மசோதாவை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிமுகப்படுத்தினார். இதை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஆவேசமாக பேசினர்.

காங்., – எம்.பி., பிரியங்கா: தனிநபரின் உரிமை பாதிக்கப்படக் கூடாது என, அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. அதற்கு எதிராக உள்ளது இந்த மசோதா. பலவீனமான மாநிலங்கள் ஏற்கனவே ஜி.எஸ்.டி.,யால் பாதிக்கும் போது, இனி, அது அதிகமாகும். நாட்கள் தான் அதிகரிக்கப்படுகிறதே தவிர, சம்பளம் உயர்த்தப்படவில்லை.

கூட்டாட்சி இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஏற்கனவே நிதி தர மறுக்கிறது. அப்படியிருக்கையில் இத்திட்டத்தின் பெயரை மாற்றுவது ஏன்? காந்தி என் குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை. அனைவரது குடும்பத்திற்கும் சொந்தமானவர். எனவே, பெயரை நீக்காமல் விரிவாக விவாதிக்க நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட கட்சியின் சித்தாந்த அடிப்டையில் எதையும் செய்யக்கூடாது.

காங்., – எம்.பி., சசி தரூர்: இது மிகவும் துரதிஷ்ருடவசமானது. காந்தியின் பெயரை நீக்குவது தவறு. அவரது ராம ராஜ்யம் என்பது அரசியலாக மாறக்கூடாது. வரலாற்று ரீதியிலான அநியாயம் இது. விதிமுறைகளுக்கும் எதிரானது. இம்மசோதா, கூட்டாட்சி முறைக்கு எதிரானது.

பா.ஜ., மூத்த தலைவரும், பார்லி., விவகார அமைச்சருமான கிரண் ரிஜிஜு கூறுகையில், ”விவாதத்தின் போது சபைக்கே வர மாட்டீர்கள். அதனால் தான் இப்போது, அறிமுகத்தின் போதே பேசிக் கொள்ளலாம் என்று ஆசைப்பட்டு எதிர்த்து பேசுகிறீர்கள்,” என்றார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
17 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
சர்வதேசச் செய்திகள்

பிபிசி உரிமக் கட்டணம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது

by Amizhthu 16 December 2025
written by Amizhthu

பிபிசி நிறுவனத்தின் ராயல் சாசனம் (Royal Charter) மீளாய்வு செய்யப்படுவதால், அதன் நிதி அமைப்பு எதிர்காலத்தில் பெரிய மாற்றங்களை சந்திக்கக்கூடும். இந்த மறுபரிசீலனை, பிபிசி எவ்வாறு நிதியளிக்கப்படுகிறது என்பதை மாற்றக்கூடியதாக இருக்கிறது. விளம்பரங்கள், சந்தா அடிப்படையிலான சேவைகள் அல்லது பிரபலமான நிகழ்ச்சிகளுக்கான கட்டணச் சுவர்கள் (paywalls) போன்ற விருப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

பின்னணி

1922 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பிபிசி, நீண்ட காலமாக கட்டாய தொலைக்காட்சி உரிமக் கட்டணம் மூலம் நிதியளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆண்டுக்கு £174.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டணம், 2024 ஆம் ஆண்டில் £3.8 பில்லியன் வருவாய் ஈட்டியது. இருப்பினும், உரிமக் கட்டணம் செலுத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது—2020 இல் 25.2 மில்லியன் இருந்தது, கடந்த ஆண்டு 23.8 மில்லியன் ஆகக் குறைந்தது.

அரசின் நிலைப்பாடு

கலாச்சாரச் செயலாளர் லிசா நாண்டி, பச்சை ஆவணத்தின் (Green Paper) மூலம் இந்த மறுபரிசீலனையை அறிவித்தார். பிபிசி “சுயாதீனமாகவும், பொறுப்புடன் செயல்படவும், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறவும்” வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஸ்ட்ரீமிங் சேவைகள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில், பிபிசி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பரிசீலனையில் உள்ள சில விருப்பங்கள்:

  • பிபிசி தளங்களில் விளம்பரங்கள் – iPlayer, பிபிசி இணையதளம் அல்லது நேரடி ஒளிபரப்புகளில்.
  • சந்தா அடிப்படையிலான சேவைகள் – பிரபலமான நாடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கான கூடுதல் கட்டணம்.
  • முன்னேற்றமான உரிமக் கட்டணம் – அதிக வருமானம் உள்ள குடும்பங்கள் அதிகம் செலுத்த, முதியோர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு தள்ளுபடி.
  • தெளிவுத்தன்மை மற்றும் ஆசிரியர் சீர்திருத்தங்கள் – செய்திகளில் துல்லியமும், சார்பற்ற தன்மையும் வலுப்படுத்துதல்.

சர்ச்சைகள் மற்றும் அழுத்தங்கள்

இந்த மறுபரிசீலனை, பிபிசி சிக்கலான சூழ்நிலையில் இருக்கும் நேரத்தில் வருகிறது. டிம் டேவி (Tim Davie) இந்த ஆண்டு தொடக்கத்தில் இயக்குநர்-பொதுமக்கள் பதவியை ராஜினாமா செய்தார். காரணம், பல சர்ச்சைகள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த $10 பில்லியன் (£7.5 பில்லியன்) வழக்கு. 2021 ஆம் ஆண்டு கேபிடல் தாக்குதல் குறித்து பிபிசி Panorama நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை திருத்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், முதியோருக்கான இலவச உரிமக் கட்டணத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் எழுந்துள்ளன. 2020 இல் நீக்கப்பட்ட இந்த நன்மை “கொடூரமானது” என்றும், முதியோருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியதாக Silver Voices போன்ற அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

பொதுமக்களின் எதிர்வினை

பொதுமக்களின் கருத்துகள் பிளவுபட்டுள்ளன. விளம்பரங்களை அறிமுகப்படுத்துவது, பிபிசியின் சார்பற்ற தன்மையை பாதிக்கக்கூடும் என்று விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். மற்றவர்கள், உரிமக் கட்டணத்தில் குறைவான இணக்கம் மற்றும் உலகளாவிய ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டி, மாற்றம் அவசியம் என வலியுறுத்துகின்றனர்.

அடுத்தடுத்த படிகள்

ஆலோசனை காலம் 2026 வரை நீடிக்கும். இறுதி பரிந்துரைகள், தற்போதைய ராயல் சாசனம் டிசம்பர் 31, 2027 அன்று காலாவதியாகும் முன் வெளியிடப்படும். எந்த மாற்றங்களும், பிபிசியின் சமூகப் பங்கு மற்றும் அதன் நிதி அமைப்பை அடிப்படையாக மாற்றக்கூடும்.

👉 சுருக்கமாக: பிபிசி உரிமக் கட்டணம் மறுபரிசீலனையில் உள்ளது. விளம்பரங்கள், சந்தா முறை, அல்லது புதிய கட்டண அமைப்புகள் அறிமுகப்படுத்தப்படலாம். அரசு, பிபிசியின் எதிர்காலத்தை பாதுகாக்க மாற்றங்கள் அவசியம் என வலியுறுத்துகிறது; ஆனால் விமர்சகர்கள், அதன் சுயாதீனத்தன்மை மற்றும் பொதுமக்கள் அணுகல் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கின்றனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
16 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
ஐரோப்பா

பாரிஸ் லூவ்ர் அருங்காட்சியகம் மூடப்பட்டது – பணியாளர்கள் வேலைநிறுத்தம், சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்

by Amizhthu 16 December 2025
written by Amizhthu

உலகின் மிக அதிகம் பார்வையிடப்படும் கலாச்சார நிறுவனமான லூவ்ர் அருங்காட்சியகம், நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் கதவுகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேலைநிறுத்தம், பணிநிலைகள் மோசமடைதல், கூட்ட நெரிசல், பாதுகாப்பு சிக்கல்கள் ஆகியவற்றை எதிர்த்து தொடங்கப்பட்டது. டிசம்பர் 15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

பணியாளர்கள் கோரிக்கைகள்

அருங்காட்சியகத்தின் 2,200 பணியாளர்களில் சுமார் 400 பேர் வேலைநிறுத்தத்தை தொடர ஒற்றுமையாக வாக்களித்துள்ளனர். CGT, CFDT, SUD Culture Solidaires போன்ற தொழிற்சங்கங்கள், பாதுகாப்பு மற்றும் பார்வையாளர் சேவைகளில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. மேலும், சமீபத்தில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக பழமையான புத்தகங்கள் மற்றும் எகிப்தியக் கலைப்பொருட்கள் சேதமடைந்ததை சுட்டிக்காட்டி, அவசர சீரமைப்புகள் தேவைப்படுகின்றன என தெரிவித்துள்ளனர்.

மேலும், பணியாளர்கள் அதிக வேலைச்சுமை, முரண்பாடான மேலாண்மை உத்தரவுகள் ஆகியவற்றால் அருங்காட்சியகத்தை பாதுகாப்பாக இயக்க முடியவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். ஜனவரியில் ஐரோப்பிய அல்லாத பார்வையாளர்களுக்கான நுழைவு கட்டணம் 45% அதிகரிக்கப்பட உள்ளது என்பதும் வேலைநிறுத்தத்தின் காரணங்களில் ஒன்றாகும்.

சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு

லூவ்ர் அருங்காட்சியகத்தில் தினசரி சுமார் 30,000 பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். “லூவ்ர் பார்வையிடுவதற்காகவே பாரிஸுக்கு வந்தோம். மிகவும் ஏமாற்றமாக உள்ளது,” என தென் கொரியாவிலிருந்து வந்த சுற்றுலாப் பயணி மின்சூ கிம் தெரிவித்தார். லண்டனிலிருந்து வந்த நடாலியா ப்ரவுன், பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தாலும், கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் வேலைநிறுத்தம் நடந்தது வருத்தமளிக்கிறது என கூறினார்.

டிசம்பர் 15-ஆம் தேதிக்கான டிக்கெட் வைத்திருந்தவர்களுக்கு தானாகவே பணம் திருப்பி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய சிக்கல்கள்

இந்த வேலைநிறுத்தம், லூவ்ர் அருங்காட்சியகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பல பிரச்சினைகளின் தொடர்ச்சியாகும். அக்டோபரில் €88 மில்லியன் மதிப்புள்ள நகைகள் பகலிலேயே கொள்ளையடிக்கப்பட்டது, பாதுகாப்பு அமைப்புகள் குறித்து கேள்விகளை எழுப்பியது. மேலும், கட்டமைப்பு சிக்கல்கள் காரணமாக கம்பானா அரங்கம் மூடப்பட்டது. நீர் கசிவு காரணமாக விலைமதிப்பற்ற கலைப்பொருட்கள் சேதமடைந்தன.

எதிர்காலம்

பிரான்ஸ் கலாச்சார அமைச்சகத்துக்கு தொழிற்சங்கங்கள் அதிகாரப்பூர்வமாக வேலைநிறுத்த அறிவிப்பை வழங்கியுள்ளன. ஆனால் பேச்சுவார்த்தைகள் இன்னும் தீர்வை எட்டவில்லை. “அடுத்த அறிவிப்பு வரும் வரை” அருங்காட்சியகம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
16 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Video News - காணொளி செய்திகள்

நீதிமன்றத்தில் நடந்த அதிர்ச்சி! திருப்பரங்குன்றம் வழக்கில் எதற்கு நமது முறையீட்டை எதிர்க்க வேண்டும் ?

by Amizhthu 16 December 2025
written by Amizhthu

சட்டத்தில் இடமிருக்கா ? மனுவை விசாரிக்க கோரியதற்கு சட்ட நடவடிக்கையா ?

வழக்கு விசாரணையின் திசைவழி போக்கை மாற்ற விரும்பவில்லையா?

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
16 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

வழக்கறிஞர்களை மிரட்டும் நீதிபதி! – திருப்பரங்குன்றம் சிக்கலில் காவிமயமான மதுரை உயர்நீதிமன்ற கிளை !

by Amizhthu 16 December 2025
written by Amizhthu

திருப்பரங்குன்றம் சிக்கலில் கவனிக்கப்படாத தமிழ் சித்தாந்த சைவ வழிபாட்டு முறைகளை கருத்தில்கொள்ள வேண்டும் என்றும், அதன்படி முடிவுகள் எடுக்கவேண்டும் என்றும் நேற்று நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக மேல்முறையீடு மனுவினை தாக்கல் செய்திருந்தோம் ( SR No : 108685 /2025). முறைப்படி இன்று அந்த மனுவானது ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் திருப்பரங்குன்றம் சிக்கல் தீபத்தூண் வழக்குடன் நாம் தாக்கல் செய்திருந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்.

இன்று காலையில் நமது வழக்கறிஞர் திரு அருணாசலம் அவர்கள் மதுரை உயர்நீதி மன்ற கிளையின் நீதிபதியும், ஜி.ஆர். ஸ்வாமிநாதன் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்தது தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவினை விசாரிக்கும் நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் நமது மனுவினையும் விசாரணையில் இணைத்துக்கொள்ளம் படி பேசினார்.

அதற்க்கு நீதிபதி செயச்சந்திரன் அவர்கள், கூடுதலாக எந்த மனுவினையும் இந்த விவகாரத்தில் எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று கூற, அதற்கு வழக்கறிஞர் அருணாசலம் அவர்கள், விசாரணையில் இருக்கும் அதிமுக்கியமான வழக்கில், கடைசி நேரத்தில் கூட தங்களது கருத்தை கூறலாம் என்று ஏற்கனவே நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள், மேலும் இந்த வழக்கில் தமிழ் சித்தாந்த சைவ வழிபாட்டு முறைப்படி எந்த கருத்தும் விவாதிக்கப்படவில்லை இதனால் எங்களது மனுவினையும் இணைத்து விசாரியுங்கள் என்று சொன்னவுடன் கோபமான நீதிபதி ” நீதிமன்ற காவலர்களை வைத்து இவரை வெளியேற்றுங்கள்” என்று மிகவும் கடுமையாக நடந்துள்ளார் நீதியரசர் ஜெயச்சந்திரன் நீதிபதி.

நீதி துறையில் நீதியரசர்கள் என்ற நீதிபதியை “மை லார்ட்” என்று சொல்வது அந்த பணிக்கான மரியாதையே தவிர, நீதியரசர்கள் தன்னையே கடவுளாக நினைத்துக் கொண்டு, தன்னை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க கூடாது என்பது, நீதித்துறையில் நீதிபதிகள் மேற்கொள்ளும் பயங்கரவாதம் ஆகும். ஏற்கனவே முடிந்த வழக்கில் கூட ஒருவர் கருத்தை பதிவு செய்ய மேல்முறையீடு செய்யலாம் என்று சட்டம் சொல்லும் போது, நடந்துகொண்டு இருக்கும் வழக்கில், தீர்வின் முக்கிய அம்சங்களை கொண்ட ஒரு கருத்தை நீதிபதிகள் பார்வைக்கே கொண்டுவர கூடாது என்பது என்ன வகையான அணுகுமுறை ?

ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட தீர்ப்பை விசாரிப்பவர்களுக்கே, புதிய கருத்துக்களை எதிர்கொள்ள பயம்வரும். நீதியரசர் ஜெயச்சந்திரன் எதைக்கண்டு பயப்படுகிறார் ? எதனால் இவ்வளவு வெளிப்படையான கோபத்தோடு நடந்துகொள்ளகிறார் ?

பிறகும் விடாத நமது வழக்கறிஞர் திரு அருணாச்சலம் அவர்கள், நீதிபதியை பார்த்து, நான் என்ன செய்தேன் ? நீதிமன்ற போலீசை வைத்து வெளியேற்றும் அளவிற்கு நடந்த குற்றம் என்ன ? “தமிழ் கடவுள் முருகனின் முதல் படைவீடு திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தமிழர் வழிபாட்டு முறையின் கீழ் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறும் மனுவை விசாரிக்க சொல்வது தவறா என்று கேட்டவுடன், உங்களுடைய, பார் கவுன்சில் எண் என்ன ? என்று கேட்டு மிரட்டி, துறை ரீதியாக உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டி, நீதிமன்றத்தில் நீதிமன்ற காவலர்களை வைத்து வழக்கறிஞர் அருணாச்சலம் அவர்கள் வெளியேற்றப் பட்டிருக்கிறார்.

சுதந்திரம் பெற்ற இந்தியாவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதே நீதியரசர்கள் இப்படிநடந்து கொள்வது மிகவும் துரதிஸ்டவசமானது. இந்த வழக்கை இதுவரை இவர்கள் எப்படி கையாண்டு கொண்டிருக்கிறார்கள், இனி எவ்வாறு கையாள போகிறார்கள் ? என்ற கேள்விகளுக்கு, நீதியரசர் ஜெயச்சந்திரன் அவர்களின் அணுகுமுறை சான்றாக அமைகிறது.

வீரத்தமிழர் முன்னணி முன்வைத்த, இந்த வழக்கத்தின் திசைவழி பயணத்தை மாற்றக்கூடிய முக்கியமான கருத்துக்களை கொண்ட ( 15 புள்ளிகள் கோடிடப்பட்டு இருந்தது) நமது மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க நீதியரசர் அச்சம் கொள்ள தேவை என்ன ?, நீங்கள் அந்த வழக்கை விசாரித்து தள்ளுபடி கூட செய்யலாம். ஆனால் விசாரணைக்கே எடுத்துக் கொள்ள மாட்டேன் என்பதும், அதை முன்மொழிய வரும் வழக்கறிஞரை மிரட்டுவதும் என்ன மாதிரியான அணுகுமுறை ?

ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும் போது, இந்த வழக்கு தொடர்பான கூடுதல் மேல்முறையீடுகளை எப்படி நீதியரசர் மறுக்கமுடியும் ?

ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்று முன்மொழிய வந்த வழக்கறிஞர் அருணாச்சலம் அவர்களை மிரட்டி, நீதிமன்ற காவலர்களை வைத்து நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றுவதும், நடவடிக்கை எடுப்பேன் என்பதும் மிகப்பெரிய கண்டனத்திற்கு உரியது. இதுபோன்ற நீதியரசர்கள் முன்வந்து இந்த வழக்கில் இருந்து வெளியேறிக்கொள்வது நீதித்துறைக்கு செய்யும் நற்காரியம். கூடுதலாக ஒரு கருத்தினை உள்வாங்க மறுக்கும் நிலையில் இந்த விசாரணையும், அதன் தீர்ப்பும் எப்படி நேர் வழியில் செல்லும் ?

நாம் தொடுத்திருக்கும் வழக்கும் “லீவ் க்ராண்ட்” அணுகுமுறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், விசாரணைக்கு எடுக்காமல் விடமுடியாது என்பதன் அடிப்படையில் நமது வழக்கிற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் என்ற ஆவலோடு காத்திருக்கிறேன்.

அதே வேளையில், நீதியரசர் ஜெயச்சந்திரன் அவர்களின் இந்த அணுகுமுறைக்கு வீரத்தமிழர் முன்னணியின் கண்டங்களை பதிவுசெய்கிறேன். நீதியை நீதியாக எதிர்கொண்ட வழக்கறிஞர் அருணாச்சலம் அவர்களுக்கு உடன் நிற்கவேண்டியது நமது கடமை.

நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கலாம், நீதியரசர்களை விமர்சிக்க கூடாது என்பது சாலை மோசமாக போடப்பட்டிருந்தால், பொறியாளரை விமர்சிக்க கூடாது. அந்த சாலையையும், அங்கே நடப்பட்டுள்ள அளவை கல்லையும் விமர்சிக்கலாம் என்பது போல இருக்கிறது. எப்பேர்ப்பட்ட நாட்டில் வாழ்கிறோம் என நினைக்கும் போது பயமாகவும் இருக்கிறது.

தமிழம் செந்தில்நாதன்
வீரத்தமிழர் முன்னணி
மாநில ஒருங்கிணைப்பாளர்

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
16 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
ஆசியா

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவாளர் ஜிம்மி லாய் குற்றவாளி என தீர்ப்பு

by Amizhthu 16 December 2025
written by Amizhthu

பிரிட்டிஷ் குடிமகனுக்கு ஆயுள் சிறை தண்டனை எதிர்பார்ப்பு, இங்கிலாந்து கடும் கண்டனம்

ஜனநாயக ஆதரவாளர் மற்றும் ஊடகத் தலைவர் ஜிம்மி லாய், பிரிட்டிஷ் குடிமகனும் ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் நிறுவுநருமான இவர், பீஜிங்கின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்படக்கூடிய இந்த தீர்ப்பு, சர்வதேச அளவில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அரசு அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

தீர்ப்பு

ஹாங்காங்க் உயர் நீதிமன்றம் லாயை, வெளிநாட்டு சக்திகளுடன் சதி செய்தது மற்றும் சிதைவூட்டும் பொருட்களை வெளியிட சதி செய்தது என்ற இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என அறிவித்தது. 2019 ஜனநாயக போராட்டங்களுக்குப் பிறகு ஹாங்காங்க் மற்றும் சீனாவுக்கு எதிராக தடைகள் விதிக்க வெளிநாட்டு ஆதரவை நாடியதாக நீதிமன்றம் கூறியது.

லாய், 78, குற்றமற்றவர் என வாதித்தாலும், நீதிமன்றம் அவரை “மூளையாளர்” எனக் குறிப்பிட்டது. 156 நாட்கள் நீண்ட விசாரணை陪审团 (ஜூரி) இல்லாமல், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் சிறப்பு நடைமுறைகளின் கீழ் நடைபெற்றது. தண்டனை அறிவிப்பு 2026 ஜனவரி 12 அன்று வெளியாக உள்ளது.

பின்னணி

லாய், முதலில் ஜியோர்டானோ ஆடை நிறுவனத்தை நிறுவிய தொழிலதிபர். பின்னர் 1995-இல் ஆப்பிள் டெய்லி பத்திரிகையை தொடங்கினார். ஹாங்காங்கில் மிகுந்த தாக்கம் செலுத்திய ஜனநாயக ஆதரவு ஊடகமாக அது விளங்கியது. 2021-இல் அதிகாரிகள் அதன் சொத்துகளை முடக்கியதால் பத்திரிகை மூடப்பட்டது. லாய் 2020 டிசம்பர் முதல் காவலில் உள்ளார்.

சர்வதேச எதிர்வினைகள்

இந்த தீர்ப்பு உலகளவில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது:

  • ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்: “இது போலியான தீர்ப்பு, நீதியின் அவமதிப்பு” எனக் கண்டனம்.
  • கமிட்டி டு புரொடெக்ட் ஜர்னலிஸ்ட்ஸ்: “பொய்யான குற்றச்சாட்டு” எனக் கூறி உடனடி விடுதலை கோரிக்கை.
  • அம்னஸ்டி இன்டர்நேஷனல்: லாயை “உணர்வுச் சிறைவாசி” எனக் குறிப்பிட்டு, கருத்துச் சுதந்திரம் ஆபத்தில் உள்ளது என எச்சரிக்கை.
  • இங்கிலாந்து அரசு: பிரதமர் கியர் ஸ்டார்மர் தலைமையில் “முழுமையாக கண்டிக்கிறோம்” எனக் கூறி, சீனாவிடம் விடுதலைக்கான அழுத்தம்.
  • அமெரிக்கா: ஹாங்காங்கை லாயை விடுவிக்குமாறு வலியுறுத்தியது.

ஹாங்காங்க் அதிகாரிகளின் நிலைப்பாடு

ஹாங்காங்க் தலைமை நிர்வாகி ஜான் லீ, தீர்ப்பை ஆதரித்து, லாய் தனது பத்திரிகையை “சமூக மோதல்களை தூண்ட, வெறுப்பை உருவாக்க, வன்முறையை மகிழ்விக்க, வெளிநாட்டு தடைகளை வெளிப்படையாக கோர” பயன்படுத்தியதாகக் கூறினார்.

பரவலான தாக்கம்

இந்த வழக்கு, ஹாங்காங்கில் செய்தி சுதந்திரம் மற்றும் நீதித்துறை சுயாதீனம் குறித்த முக்கிய சோதனையாகக் கருதப்படுகிறது. “ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்” என்ற கொள்கையின் கீழ் இருந்த சுதந்திரங்கள் குறைந்து வருவதை இது வெளிப்படுத்துகிறது.

ஜிம்மி லாயின் எதிர்காலம் ஜனவரியில் அறிவிக்கப்படும் தண்டனையில் தீர்மானிக்கப்படும். ஆனால், அவரது வழக்கு ஏற்கனவே ஹாங்காங்கில் சுதந்திரங்கள் சிதைவடைந்ததற்கான உலகளாவிய சின்னமாக மாறியுள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
16 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
புலம்பெயர் தமிழர்கள்

‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19’ம் ஆண்டு நினைவேந்தல். – பிரான்சு

by Amizhthu 16 December 2025
written by Amizhthu

தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பிரதேசத்தில் பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெற்றது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பொண்டி தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரர் பணிமனை துணைப் பொறுப்பாளர் திரு.குலம் அவர்கள் ஏற்றிவைக்க, மாவீரர் பொதுப்படத்துக்கான ஈகைச்சுடரினை 06.07.2003 அன்று சர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி லெப் கேணல் யாழினியின் சகோதரி அவர்கள் ஏற்றிவைத்து, மலர் வணக்கம் செலுத்தினார்.

தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் திருஉருவப்படத்துக்கான ஈகைச்சுடரினை கப்டன் பாசறைவாணன் மற்றும் லெப். உசாந்தினி/வாசுகி அவர்களின் சகோதரர் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து பொது மக்கள் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. பொண்டி தமிழ்ச் சோலை, நுவசி சாம் தமிழ்ச் சோலை நியூலிசுர்மார்ன் தமிழ்ச் சோலை ஆகிய பள்ளி மாணவர்களின் எழுச்சி நடனம், பாடல் மற்றும் கவிதை, பேச்சு என்பவற்றுடன் தமிழர் கலை பண்பாட்டுக் கழகக் கலைஞர்களின் பாடல்களும் இடம்பெற்றன.

பொண்டி நகரபிதா Stephen HERVÉ அவர்களும் தேசத்தின்குரல் நினைவு சுமந்து தனது கருத்துக்களைப் பதிவுசெய்திருந்தார்.

முக்கியமாக, பொண்டி நகரபிதா Stephen HERVÉ (ஸ்டீபன் ஹெர்வே), தான் இன்றைய நிகழ்வில் பங்கேற்றமை. மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களை நினைவுகூர்ந்தமை தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதெனவும். பொண்டி நகரின் ஆதரவு -தமிழ்மக்களுக்கு எப்போதும் உள்ளது எனவும் தெரிவித்த அவர், சங்கங்கள், குடும்பங்கள்,, குழந்தைகள் என அனைத்தையும் பாராட்டி, உங்கள் செயல்பாடுகள் முக்கியம்ஸவாய்ந்தது என்று கூறினார் .

உறவுகளை வலுப்படுத்துதல் – பொண்டி நகருக்கும் தமிழீழத்திற்கும் (யாழ். நகரம் ) இடையே நல்ல தொடர்புகளை உருவாக்க விரும்புவதாகக் கூறிய அவர், – நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கு நன்றியைத் தெரிவித்து, பாடல்கள், நடனங்கள் எல்லாம் பாராட்டத்தக்கவை எனவும் கூறினார்..

நினைவுரையினை தேசத்தின் குரல் பாலா அண்ணன் நினைவு சுமந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார்.

சிறிலங்கா அரசு தமிழர் தேசத்தை அங்கீகரித்தால், இலங்கைத் தீவில் வளம்மிக்க இரண்டு தேசங்கள் வல்லமை கொண்டு உருவாகும்.

அது ஒன்றுக்கொன்று சிநேகத்தையும் வளத்தையும் பகிர்ந்துகொள்ளும் என்ற கருத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அன்றைக்கு முன்வைத்தார்.

அதனை சிறிலங்கா அரசு ஏற்றிருந்தால், தமிழர் தேசம்மீது போரையும் ஒடுக்குமுறையையும் நிறுத்தியிருந்தால் இலங்கையின் வரலாறு வேறுவிதமாய் எழுதப்பட்டிருக்கும்.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் , தமிழீழ தேசத்திற்கும் சிறிலங்காவுக்கும் மாத்திரமல்ல, உலகிற்கும் தேவையான இராஜதந்திரி என்பதுதான் பேருண்மையானது.

அரசியல், வரலாறு, தத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு கோட்பாட்டு வடிவம் கொடுத்த முக்கிய ஆளுமையே தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம். என் அவரது உரையில் தெரிவித்திருந்தார்.

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
16 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கையின் பதுளையில் 165 பள்ளிகள் சேதமடைந்துள்ளன, 27 பள்ளிகள் ஆபத்தில் உள்ளன.

by Amizhthu 15 December 2025
written by Amizhthu

பதுளை மாவட்டத்தில் அனர்த்தங்களை எதிர்கொள்ளாத பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இம்மாவட்டத்திலுள்ள 601 பாடசாலைகளில் 165 பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. அவற்றில் 27 பாடசாலைகள் அபாய நிலையில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவை தொடர்பான இறுதி அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை. கிடைத்த பின்னரே அவற்றை மீள ஆரம்பிக்க முடியும் என பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

பதுளையில் திங்கட்கிழமை (15-12-2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பதுளை மாவட்டத்தில் மாத்திரம் 26 914 குடும்பங்களைச் சேர்ந்த 91 485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆகவும் காணப்படுகிறது. 6038 குடும்பங்களைச் சேர்ந்த 18 232 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5897 குடும்பங்களைச் சேர்ந்த 21 492 பேர் வீடுகளை இழந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். 596 வீடுகள் முழுமையாகவும், 8075 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

குடி நீர் விநியோகம் முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ள போதிலும், சுமார் 5000 மின்சார பாவனையாளர்களுக்கு மாத்திரம் மின்சாரத்தை மீள் வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. விரைவில் அவையும் சீராக்கப்படும். சேதமடைந்திருந்த 25 பிரதான வீதிகளில் 24 வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரேயொரு வீதி மாத்திரம் பாலம் அமைக்கப்பட்டு நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளது. மேலும் 174 சிறு வீதிகளில் 166 வீதிகளும் புனரமைக்கப்பட்டுள்ளன.

இந்த பாதைகளில் 335 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. அவற்றில் தற்போது 324 பேரூந்துகள் வழமை போன்று சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இவை தவரி 614 தனியார் பேரூந்துகளில் 599 பேரூந்துகள் தற்போது சேவையில் ஈடுபடுகின்றன. பதுளையில் வைத்தியசாலைகள் உள்ளிட்ட மருத்துவ நிலையங்கள் 14 அனர்த்தங்களால் சேதமடைந்தன. எனினும் மூன்று நாட்களில் அவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.

இதுவரையில் பதுளை மாவட்டத்தில் 5040 குடும்பங்களுக்கு 25 000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. 1260 இலட்சம் ரூபா பதுளை மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் முழுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இந்த தொகையை வழங்க முடியும் என்று நம்புகின்றோம். வீடுகளில் சேதமடைந்த பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 50 000 ரூபா விரைவில் வழங்கப்படும்.

அதேவேளை பாதிக்கப்பட்ட விவசாய நடவடிக்கைகளை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் அனர்த்தங்களை எதிர்கொள்ளாத பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. பதுளை மாவட்டத்திலுள்ள 601 பாடசாலைகளில் 165 பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. அவற்றில் 27 பாடசாலைகள் அபாய நிலையில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை தொடர்பான இறுதி அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை. கிடைத்த பின்னரே அவற்றை மீள ஆரம்பிக்க முடியும் என்றார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
15 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Copyright © amizhthu.com 2026

அமிழ்து
  • News in ENGLISH
  • தமிழீழம்
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • நாட்காட்டி
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு

Shopping Cart

Close

No products in the basket.

Close
 

Loading Comments...
 

    %d