இலங்கை கடற்படை ஒத்துழைப்பை மறுஆய்வு செய்ய அமெரிக்க பசிபிக் கடற்படைத் தளபதி கொழும்பு கப்பல்துறைக்கு வருகை தந்தார்.
கொழும்பு

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்கும், சாத்தியமான ஒத்துழைப்புகளை ஆராய்வதற்கும் அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீபன் கோலர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை (20-02-2026) கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்திற்கு விஜயம் செய்தனர்.
இந்த விஜயத்தின் போது, கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதம நிறைவேற்று அதிகாரி திமிர எஸ். கொடாகும்பர உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இந்தியப் பெருங்கடலில் கொழும்பு கொண்டுள்ள மூலோபாய ரீதியான முக்கியத்துவம் மற்றும் அமெரிக்க கடற்படைக் கப்பல்களுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், தளவாட ஆதரவு திறன்களை மேம்படுத்துவதற்கும் இரு தரப்பினரும் முக்கியத்துவம் அளித்தனர். கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, தூதுக்குழுவினர் கப்பல் கட்டும் தளத்தின் வசதிகளைப் பார்வையிட்டனர்.
இந்த விஜயமானது கொழும்பு டொக்யார்ட் மற்றும் அமெரிக்க கடற்படைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், எதிர்காலத்தில் கப்பல் திருத்தம் மற்றும் கடல்சார் ஆதரவு சேவைகளில் புதிய ஒத்துழைப்புகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
