தேர்தலில் ஸ்டாலினுக்கு 2.0 கிடைக்காது, 0.0 தான் கிடைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.

சென்னை

அவரது அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற அரசு, மத்திய அரசு கேட்டதைத் தரவில்லை என்று வாய்ஜாலம் காட்டிக்கொண்டிருக்கிறது. தங்களுடைய இயலாமையை, தோல்வியை மறைக்க, மத்திய அரசு போதிய நிதியை தமிழகத்திற்கு தரவில்லை; ரயில்வே திட்டங்கள் வரவில்லை என்றெல்லாம் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு மக்களுக்கு நிஜமாக அல்வா கொடுக்கும் பம்மாத்து வேலையை அரங்கேற்றி வருகிறது.

ஏமாற்று மாடல் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாளை எதிர்பார்த்து தமிழக மக்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வருவோம். திமுக-வின் 2.0 ஆட்சியில் தமிழகம் சுபிட்சம் பெறும் என்றெல்லாம் மக்களின் காதுகளில் காகிதப் பூ சுற்றி வருகிறார் ஸ்டாலின்.

‘பேஸ்மென்ட் வீக் – பில்டிங் ஸ்டிராங்’ என்று ஒரு படத்தில் வரும் நகைச்சுவை காட்சியைப் போல, இவருடைய ஆட்சியே ஆட்டம் கண்டு இன்றோ, நாளையோ என்று ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில், காலையில் எழுந்தவுடன் மேக்கப் போட்டுக்கொண்டு, கண்ணாடி முன் நின்று வெற்றி, வெற்றி என்று இம்சை அரசின் 23ம் புலிகேசி போல் திரு. ஸ்டாலின் கூக்குரல் இட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, தமிழக மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள். வரும் சட்டசபை தேர்தலில் தனக்கு தோல்வி நிச்சயம் என்பதை திரு. ஸ்டாலின் நன்கு உணர்ந்துள்ளார்.

அதன் விளைவு, அரசியல் ரீதியாக, தர்க்க ரீதியாக, நாகரீகமாக களத்தில் எதிர்த்து நிற்கும் அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதும், தரக்குறைவாகப் பேசுவதும், ஒருவரை அசிங்கப்படுத்திவிட்டால், அவர்கள் மானத்திற்கு பயந்து களத்தில் இருந்து ஓடிவிடுவார்கள் என்று அல்பத்தனமாக கருதுவதும் முதல்வர் ஸ்டாலினின் வாடிக்கையாகிவிட்டது. தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக என்னென்ன திட்டங்களை செயல்படுத்தி உள்ளீர்கள் என்பதை வெளிப்படையாக மக்களிடம் தெரிவித்து, ஓட்டு கேட்க ஸ்டாலின் தயாரா? அப்படி அவர் களத்திற்கு வந்தால், அவருக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல, வெறும் ஜீரோதான். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.

Leave a Reply