திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை. – ஹரிணி அமரசூரிய
திருகோணமலை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் அவசரகால சட்டத்தின் பிரகாரம் பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று எதிர்கட்சியினர் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. சாதாரண சட்டத்தின் பிரகாரமே அந்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள். பொதுச்சட்டத்தின் பிரகாரமே உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறார் அவ்வாறாயின் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது யார்? தேங்காய் உடைத்தது யார் ?கல்வி ஆபாசம் என்று குறிப்பிட்டது யார்? என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06-02-2026) நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பாராளுமன்றத்தில் காலையில் அடிப்படையற்ற விடயங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை பிரதான பழக்கமாக எதிர்க்கட்சியினர் கொண்டுள்ளனர். எதிர்க்கட்சியின் ஒருசில சிரேஷ்ட உறுப்பினர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதையிட்டு கவலையடைகிறேன்.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் அவசரகால சட்டத்தின் பிரகாரம் பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று எதிர்கட்சியினர் உறுப்பினர் குறிப்பிட்டார். இது முற்றிலும் தவறானது.
போலியானது. சாதாரண சட்டத்தின் பிரகாரமே அந்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள். பொதுச்சட்டத்தின் பிரகாரமே உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆகவே எதிர்க்கட்சியினர் ஏன் இவ்வாறு பொய்யுரைக்கிறார்கள்.
அதேபோல் அவசரகால சட்டத்தை பயன்படுத்தி ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று குறிப்பிடுகிறார்கள். எந்த ஊடகத்துக்கு எதிராக , என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை எதிர்க்கட்சியினர் குறிப்பிட வேண்டும்.
எந்த போராட்டத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம் என்பதை எதிர்க்கட்சி குறிப்பிட வேண்டும். மக்களை தவறாக வழிநடத்தும் விடயங்களையே குறிப்பிடுகிறார்கள்.
புதிய கல்வி மறுசீரமைப்பு நீக்கப்படவில்லை. தற்காலிகமாகவே பிற்போடப்பட்டுள்ளது. ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் தவறுகளை திருத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாங்கள் எதனையும் மூடிமறைக்கவில்லை.
எதிர்க்கட்சியினர் தான் இவ்விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் கல்வி மறுசீரமைப்புக்கு பாரியதொரு எதிர்ப்பை ஏற்படுத்தி தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தினார்கள். தற்போது தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.
எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையாயின் யார் போராட்டங்களை நடத்தியது, யார் கதிர்காமத்துக்குச் சென்று தேங்காய் உடைத்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரன தொகுதி அமைப்பாளர் தேங்காய் உடைக்கும் நடவடிக்கையை ஏற்பாடு செய்தார்.
கதிர்காமத்தில் தேங்காய் உடைக்கும் போது ‘ என்னை வீடியோ எடுக்க வேண்டாம், அந்த பக்கம், அந்த பக்கம்’ என்று சொன்னதை முழு நாடும் பார்த்தது.
புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிராக பிரதேச மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் எதிர்ப்புக்களை தோற்றுவிக்கவில்லையா, கல்வி ஆபாசமாக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடவில்லையா, கல்வி ஆபாசமானது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தெளிவுப்படுத்த வேண்டும். ஆரோக்கியமான கருத்துக்களுக்கும், கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியும். அதனை விடுத்து வதந்திகள் பற்றி பேசுவது பயனற்றது என்றார்.