இலங்கையில் போதைப்பொருள் மற்றும் மது அருந்திய ஓட்டுநர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை

பொதுப்போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான விசேட ஆய்வக சோதனை நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய கடந்த ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருளை உட்கொண்டு வாகனம் செலுத்திய 1,209 சாரதிகளும், மது போதையில் வாகனம் செலுத்திய 21,414 சாரதிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியு.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார்.

பொலிஸ் ஊடகப்பிரிவில் வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மொரட்டுவை – கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் பொது பேருந்துகளின் ஒரு சில சாரதிகளும், நடத்துநர்களும் போதைப்பொருள் மற்றும் மது போதையில் உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் செலுத்துவதாக அண்மைக்காலமாக பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.City & Local Guides

தூரப்பிரதேசங்கள் மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் பயணிக்கும் ஒரு சில பேருந்து சாரதிகளும் இவ்வாறு போதைப்பொருட்களை உபயோகிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேற்படி சாரதிகளைக் கண்டறிய நடமாடும் ஆய்வுகூட வசதிகளைப் பயன்படுத்தி, பரிசோதிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் பேலியாகொட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 10 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏனைய முக்கிய போக்குவரத்துப் பாதைகளிலும் இச்சோதனை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (05-02-2026) காலை மொரட்டுவை பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த சுமார் 250 சாரதிகள் மற்றும் நடத்துநர்களிடம் இந்தத் திடிர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது 8 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஐவர் பேருந்து சாரதிகள் மற்றும் மூவர் நடத்துநர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 3 பேருந்துகள் பொலிஸாரால் பொறுப்பேற்க பட்டுள்ளன. அத்தோடு கைதான நபர்கள் ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ உள்ளிட்ட நச்சுப்போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தியிருந்தமை பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

மினுவாங்கொடையில் இடம்பெற்ற சோதனையின் போது லொறி சாரதி ஒருவர் ஹெரோயின், ஐஸ், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் என ஐந்துக்கும் மேற்பட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தார். இவ்வாறான சாரதிகள் பொது வீதிகளில் வாகனங்களைச் செலுத்துவது மக்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும்.

ஆகையால் எதிர்வரும் நாட்களில் பாரிய விபத்துக்கள் நிகழும் இடங்களில் சம்பந்தப்பட்ட சாரதிகள் அனைவரும் கட்டாயம் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவ்வாறான சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களது சாரதி அனுமதிப்பத்திரமும் வாழ்நாள் முழுவதும் இரத்து செய்யப்படும். அதேநேரம், இவ்வாறான குற்றவாளிகளைக் கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஊக்குவிக்கும் வகையில் 10 ஆயிரம் ரூபா விசேட சன்மானமும் வழங்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.

Leave a Reply