கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ‘ஃபேஸ் ஆப்’ என்ற புதிய தொழில்நுட்பம் விரைவில் செயல்படுத்தப்படும்.
பாலக்காடு
கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, விரைவில் ‘பேஸ் ஆப்’ என்ற புதிய தொழில்நுட்பம் நடைமுறைக்கு வர உள்ளது.

நாட்டில் சில விமான நிலையங்களில், ‘பேஸ் ஆப்’ தொழில்நுட்பம் தற்போது நடை முறையில் உள்ளது. அதன்படி, பயணியர் விமான நிலையத்தில் நுழைந்ததும், ‘பேஸ் ஆப்’ திரை முன் நின்று முகத்தை காட்டினால், அவருடைய விபரங்கள் ஆதார் போன்ற அடையாள அட்டைகளின் வாயிலாக சரிபார்க்கப்படும்.
அந்த விபரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், அந்த பயணி, ஒரு சில நிமிடங்களில் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார். இதனால், காத்திருப்பு தவிர்க்கப்படுகிறது. இதே தொழில்நுட்பத்தை குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நடைமுறைப்படுத்த உள்ளது.
இது குறித்து, கோவில் நிர்வாக அதிகாரி வினய்குமார் கூறியதாவது:
சாதாரண நாட்களில், 30,000 பேர், விடுமுறை நாட்களில் 60,000 பேர் வரையிலும் தரிசனத்திற்கு வருகின்றனர். ஏகாதசி, உத்சவம் போன்ற விசேஷ காலங்களில், இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது. பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க, கோவிலைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் ‘பேஸ் ஆப்’ கவுன்டர்கள் அமைக்கப்படும்.
அங்குள்ள ஸ்கேனரில் முகத்தை ஸ்கேன் செய்து, அவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்படும். அப்போது, அவருக்கான தரிசன நேரம் குறித்த டோக்கன் வழங்கப்படும்.
பக்தர்கள் காத்திருக்கும் பகுதி, 12 பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 200 பக்தர்கள் அமர வைக்கப்படுவர். பக்தர்களின் டோக்கன் எண்கள் அங்குள்ள திரையில் தோன்றும் போது, அவர்கள் தரிசனத்திற்குச் சென்றால் போதுமானது. இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.