தெருவில் திரியும் கால்நடைகளுக்கான அபராதம் ரூ.10,000 ஆக அதிகரிப்பு; மட்டக்களப்பு மாநகர சபை

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் கட்டாக்காலி மாடுகளுக்கான தண்டப்பணம் 10ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வானது மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.

இன்றைய சபை அமர்வில் மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன்,சபையின் செயலாளர்,மாநகரசபை உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முதல்வரின் தலைமையுரையுடன் சென்ற கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அது திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து சபையின் நிலையியல் குழுக்களினால் கலந்தாலோசனை செய்யப்பட்டு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் மாநகரசபை முதல்வரின் முன்மொழிவுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு சபையின் அனுமதிகள் பெறப்பட்டன.

கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தபோதிலும் அதனை கட்டுப்படுத்துவதில் பல சவால்களை எதிர்கொள்வதாகவும் இதன் காரணமாக சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதன் காரணமாக மாநகரசபையினால் தொடர்ச்சியான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மாநகரசபை முதல்வரினால் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இதுவரையில் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும்போது பதிவுசெய்யப்பட்ட மாடுகளுக்கு 5000ரூபாவும் பதிவுசெய்யப்படாத மாடுகளுக்கு 7500ரூபாவும் அறவிடப்பட்டதாகவும் அதனை மாற்றி இனி வரும் காலங்களில் கட்டாக்காலி மாடுகளுக்கு 10ஆயிரம் ரூபா தண்டப்பணமாக அறவிடப்படும் என்ற முன்மொழிவு முதல்வரினால் முன்வைக்கப்பட்டது.

இதற்கு சபை அனுமதி வழங்கிய நிலையில் கட்டாக்காலி நாய்களினாலும் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி நாய்களினால் பல்வேறு விபத்துகள் இடம்பெறுவதுடன் பாதசாரிகளும் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்வதாகவும் மாநகரசபை உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டுவருவதுடன் நாய்கள் காப்பகம் ஒன்றிணை அமைப்பதற்கான செயற்பாடுகள் தனவந்தர் ஒருவர் உதவமுன்வந்துள்ளதாகவும் இது தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று கல்லடி பாலத்தில் உள்ள மின்சார விநியோகத்திற்கான நிதியினை செலுத்துவதற்கும் அதனை பராமரிப்பதற்குமான பொறுப்பினை மாநகரசபை ஏற்றுள்ளதன் காரணமாக அதற்கான நிதிவிடுவிப்புக்கான அனுமதிகோரப்பட்ட நிலையில் பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் அனுமதி வழங்கப்பட்டது.

குறிப்பாக கல்லடி பாலம் உட்பட பல இடங்கள் இருளில்மூழ்கியுள்ளமை தொடர்பில் இங்கு உறுப்பினர்களினால் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அவற்றினை படிப்படியாக ஒளியூட்டுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் அதற்கு அனைத்துவிட்டார உறுப்பினர்களும் உதவவேண்டும் என மாநகரசபை முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றபோதிலும் முன்மொழிவுகளுக்கு சபையின் அனுமதிகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து சபையின் நிலையியல் குழுக்களின் தலைவர்களின் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

Leave a Reply