பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி லக்கி ஓபராய் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், வெளிநாட்டில் வசிக்கும் தாதா உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சண்டிகர், இந்தியா – 08 பிப்ரவரி 2026
பஞ்சா ப் மாநிலம் ஜலந்தர் குரு தேவ் பஹதுார் நகரைச் சேர்ந்தவர் சத்விந்தர் பால் சிங் என்ற லக்கி ஓபராய், 38. ஆம் ஆத்மி கட்சியின் ஜலந்தர் கன்டோன்மென்ட் வார்டு பொறுப்பாளர். நிதி நிறுவனம் நடத்தி வந்தார். நேற்று முன் தினம் காலை ஜலந்தர் மாடல் டவுன் குருத்வாராவுக்கு வந்தார்.

அங்கு வழிபாடு செய்து விட்டு, ‘மஹிந்திரா தார்’ காரில் புறப்பட தயாரானார். அப்போது, ‘ஹூடி’ எனப்படும், தலைவரை மூடும் ஆடை அணிந்து வேகமாக நடந்து வந்தவர் திடீரென ஓபராயை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
மார்பு உள்ளிட்ட பகுதிகளில் குண்டுகள் பாய்ந்து ஓபராய் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். துப்பாக்கியால் சுட்டவர் தன் கூட்டாளியுடன் பைக்கில் தப்பினார். இந்தக் காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளன. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஓபராயை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
லக்கி ஓபராய் சகோதரர் தமந்தீப் சிங், போலீசில் கொடுத்த புகாரில், ‘தாதா ஜோகா மற்றும் தல்பிரா மற்றும் அவர்களது கூட்டாளிகள் ஏற்கனவே ஓபராயை மிரட்டி வந்தனர். இந்நிலையில்தான் கொலை செய்துள்ளனர்’ என கூறியிருந்தார். அதன்படி, வெளிநாட்டில் வசிக்கும் தாதா ஜோக்ராஜ் சிங் என்ற ஜோகா போலிர்வால், தல்பீரா மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு பேர் மீது ஜலந்தர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தாதா ஜோகா போலிர்வால் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கல்லுாரி மாணவர் சங்கத் தலைவர் பதவி தொடர்பான தகராறில் ஏற்பட்ட விரோதத்தால் லக்கி ஓபராயை கொலை செய்தேன்,”என, கூறியுள்ளார்.
ஜலந்தர் மாவட்டம் போலிர்வால் பகுதியைச் சேர்ந்த தாதா ஜோகா, வெளிநாட்டில் வசிப்பதாக கூறப்படுகிறது. ஓபராயும் ஜோகாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
கல்சா கல்லுாரி மாணவர் சங்கத் தலைவர் தேர்தல் தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
உடற்கூறு ஆய்வுக்குப் பின், லக்கி ஓபராய் உடல் குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. நேற்று மாலை, ஜலந்தரில் உடல் தகனம் செய்யப்பட்டது.
பஞ்சாப் அமைச்சர் மொகிந்தர் பகத் கூறுகையில், “கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர்.
முதல்வர் பகவந்த் மான், டி.ஜி.பி.,யை ஜலந்தருக்கு சென்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
குடும்ப உறுப்பினரை இழந்தவர்கள் கடும் மன உளைச்சலில் விமர்சனம் செய்வது இயல்புதான்,”என்றார்.
எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், அகாலி தளம் மற்றும் பா.ஜ., ஆகிய கட்சிகளும், பஞ்சாப் மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளன.