பிரான்சிலிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆர்வமாக உள்ளது.

புது தில்லி, இந்தியா – 09 பிப்ரவரி 2026

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இம்மாத இறுதியில் இந்தியா வரவுள்ள நிலையில், அதற்கு முன் அந்நாட்டிடம் இருந்து, 114 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை இறுதி செய்ய ராணுவ அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது.

ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து நம் விமானப்படைக்காக, 36 ரபேல் போர் விமானங்கள் ஏற்கனவே வாங்கப்பட்டன. மேலும் கடற்படைக்காக, ரபேல் – எம் எனப்படும், கடல் பாதுகாப்புக்கான 26 விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம், கடந்த ஆண்டு ஏப்ரலில் கையெழுத்தானது.

தற்போது, விமானப்படையில் உள்ள போர் விமானங்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, பிரான்சிடம் இருந்து மேலும் 114 ரபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. இந்த முன்மொழிவுக்கு, ஆரம்ப கட்ட அனுமதியை, கடந்த மாதம் ராணுவத் துறை செயலர் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் வாரியம் வழங்கியிருந்தது.

அதன் பின், டி.ஏ.சி., எனப்படும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதன் தலைவராக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளார். பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வருகைக்கு முன், டி.ஏ.சி., கூட்டம் கூட உள்ளது. இதில், இறுதி ஒப்புதல் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், 18 ரபேல் விமானங்கள் நேரடியாக வாங்கப்படவுள்ளன. மீதமுள்ளவை, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், இந்தியாவில் தயாரிக்கப்படும். டி.ஏ.சி., ஒப்புதல் கிடைத்ததும், தொழில்நுட்ப மற்றும் வர்த்தக பேச்சுகள் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply