“தி.மு.க. கூட்டம் நடத்தினால் மட்டும் உடனடியாக அனுமதி கிடைப்பது எப்படி?” என, த.வெ.க. பொதுச்செயலர் அருண்ராஜ் கேள்வி!
திருச்சி, தமிழ்நாடு – 10 பிப்ரவரி 2026

த.வெ.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான மக்கள் கருத்து அறியும் கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலர் அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று, பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை கேட்டனர்.
எந்தவொரு அரசு பதவியிலும் இல்லாத த.வெ.க., தலைவர் விஜய், ஊழல் செய்தது கிடையாது. ஆனால், ‘விஜய் ஊழல் செய்தார்’ என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசுகிறார். அவரை பார்த்தால், பரிதாபமாக இருக்கிறது. வரி ஏய்ப்பு என பொதுவாக கூறக்கூடாது.
காலம் தாழ்த்தி ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதை சட்டப்படி எதிர்த்து மனு தாக்கல் செய்தோம். தற்போது வெளியான நீதிமன்ற தீர்ப்பில், மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்.
எங்கள் தேர்தல் அறிக்கைக்காக, மது விலக்கு தொடர்பான கோரிக்கைகள் வந்துள்ளன. இது குறித்து விஜய் இறுதி முடிவை எடுப்பார்.
அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவது தொடர்பாக வழிகாட்டல் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், தி.மு.க., கூட்டம் நடத்தினால் மட்டும் உடனடியாக அனுமதி கிடைப்பது எப்படி? த.வெ.க.,வைப் பார்த்து பயப்படுவதால் தான், விஜய் மக்களை சந்திப்பதை தடுக்க தி.மு.க.,வினர் முயற்சிக்கின்றனர்.
காங்., உடன் கூட்டணி பேச்சு நடக்கிறதா என்பதை வெளிப்படையாக கூற முடியாது. எதுவாக இருந்தாலும், கூட்டணி குறித்து விஜய் தான் இறுதி முடிவு எடுப்பார். கூட்டணியை நம்பி த.வெ.க., துவக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.