மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்கள் வெடிக்கும். அவற்றைத் தடுக்கவே அவசரகாலச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கை

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க அடக்குமுறைகளைக் கையாளத் தயாராகி வருகிறது. எதிர்வரும் மே அல்லது ஜூன் மாதங்களில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவற்றை கட்டுப்படுத்துவதற்காகவே அவசர கால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் திங்கட்கிழமை (09-02-2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் தபால் கட்டணத்தை 20 ரூபாவால் அதிகரித்து, குறைந்தபட்ச முத்திரைக் கட்டணத்தை 70 ரூபாவாக மாற்றியுள்ளது. இன்றைய நவீன தொழில்நுட்பக் காலத்தில் தபால் சேவையைப் பயன்படுத்துவோர் குறைந்துள்ள நிலையில், இந்த விலையேற்றம் பாரம்பரிய தபால் முறையை மேலும் முடக்கும் செயலாக அமையும்.
வாழ்க்கைச் செலவைக் குறைப்பதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த ஜே.வி.பி தலைமையிலான அரசாங்கம், இன்று மிகவேகமாக விலைகளை உயர்த்தி வருகின்றது. 2027ஆம் ஆண்டு வரை சம்பள உயர்வு வழங்க முடியாது என ஜனாதிபதி கூறுவது, தேர்தல் மேடைகளில் அவர் அளித்த வாக்குறுதிகளுக்கு எதிரானது என்பதை நினைவுபடுத்துகின்றோம்.
சுகாதாரம், கல்வி, மீன்பிடி மற்றும் விவசாயத் துறைகளில் பல்வேறு போராட்டங்கள் வெடித்துள்ளன. அரசாங்கத்தைக் கொண்டுவர உதவிய அதே தரப்பினர், இன்று அரசாங்கத்தின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்து வீதிக்கு வரத் தொடங்கியுள்ளனர். நாட்டில் தற்போது அவசர காலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை. ஆனால் அரசாங்கம் அதைச் செய்துள்ளது.
வரவிருக்கும் மே, ஜூன் மாதங்களில் ஏற்படக்கூடிய மக்கள் போராட்டங்களையும், வேலைநிறுத்தங்களையும் அடக்குமுறை மூலம் ஒடுக்குவதற்காகவே அரசாங்கம் இந்த அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. நெல் விவசாயிகளுக்கான நியாயமான விலை வழங்கப்படாமை மற்றும் களஞ்சியசாலைகள் மூடப்பட்டிருப்பது போன்ற சிக்கல்கள் காரணமாக விவசாயிகளும் போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர்.
அரிசி இறக்குமதி செய்ய மாட்டோம் என்று கூறிவிட்டு, தற்போது அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்வாறான தன்னிச்சையான தீர்மானங்களுக்கு எதிராக சகல துறைகளிலிருந்தும் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தயாராகி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமும் இன்றிலிருந்தே தயாராகி வருகிறது என்றார்.