குருவாயூர் கோயில் ஹோட்டல்கள் என்ற பெயரில் மோசடி வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், கேரளா

கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயில் அருகே உள்ள பாஞ்சஜன்யம், கவுஸ்துபம் உள்ளிட்ட பிரபல தங்கும் விடுதிகளின் பெயரில் போலி வெப்சைட்’ உருவாக்கப்பட்டு பணமோசடி செய்யப்பட்டு வருகிறது. இதில் பல பக்தர்களும் ஏமாந்து சிறிய தொகை என்பதால் புகார் செய்ய முன் வருவதில்லை. ஆனால் பெருமளவில் மோசடி நடப்பதாக திருச்சூர் போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து விசாரணையில் இறங்கினர்.

அதில் உத்தரபிரதேச மாநிலம் டான்கோர் மேவாட் பகுதியைச் சேர்ந்த முகமது ஷான் 24, கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து மடிக்கணினி, அலைபேசி மற்றும் பிற டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாட்டில் பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு அருகில் உள்ள தங்கும் விடுதிகளின் பெயரில் போலி வெப்சைட்’களை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த 15 நாட்களில் மட்டும் இவர் 97 லட்ச ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.

இவருக்கு உடந்தையாக இருந்த சிலர் தலைமறைவாகி விட்டதாகவும், கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply