இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவது நாட்டின் மிகப்பெரிய சுகாதார சவாலாக மாறியுள்ளது.

இலங்கை

இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவது இந்நாட்டின் மிகப்பெரிய சுகாதார சவாலாக மாறியுள்ளது. அந்த வகையில் நாளாந்தம் நாடளாவிய ரீதியில் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 40 பேர் புற்றுநோயால் மரணத்தைத் தழுவுகின்றனர். நோயாளர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளி பிரிவு வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட புற்றுநோய் முன்கூட்டியே கண்டறியும் மத்திய நிலையத்தை திங்கட்கிழமை (09) பிரதியமைச்சரால் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தற்போது இந்நாட்டில் புற்றுநோய் ஒரு பிரதான சுகாதாரப் நெறுக்கடியாக உருவெடுத்துள்ளது. சிகிச்சைகளுக்காக அரசாங்கம் பாரிய தொகையை செலவிட வேண்டியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக நாட்டிள் உள்ள பெரும்பாலான நோயாளர்கள் புற்றுநோயின் இறுதி நிலைகளிலேயே சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் அவர்களுக்குப் பலதரப்பட்ட சிகிச்சை முறைகளை வழங்க வேண்டியுள்ளது. அத்தோடு நாட்டில் பதிவாகும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை தீவிரமடைந்து வருகிறது.

நாடளாவிய ரீதியில் நாளாந்தம் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 40 பேர் புற்றுநோயால் மரணத்தை தழுவுகின்றனர். அந்தவகையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு, புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் மத்திய நிலையங்களை நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பதுளை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய 6 பிரதான வைத்தியசாலைகளில் இத்தகைய நிலையங்கள் இயங்கி வருகின்றன. புதிதாகத் திறக்கப்பட்ட இந்த மத்திய நிலையத்தில் மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் வாய்ப் புற்றுநோய் ஆகியவற்றைக் கண்டறியும் நவீன மருத்துவ வசதிகள் உள்ளன. அரச விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை பொதுமக்கள் இங்கு பரிசோதனைகளைச் செய்துகொள்ள முடியும்.

ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்பதால், பொதுமக்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளான உணவுப் பாதுகாப்பு, சூழல் காரணிகள் மற்றும் விவசாய இரசாயனப் பயன்பாடு குறித்து அமைச்சு மட்டத்திலான விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஆண்களிடையே வாய்ப் புற்றுநோய் அதிகளவில் காணப்படுகிறது.

வெற்றிலை, புகையிலை மற்றும் பாக்கு மெல்லுதல் காரணமாக நாளாந்தம் 10 வாய்ப் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன் மூவர் உயிரிழக்கின்றனர். அதேபோல், பெண்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் என்பன அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்க முறையான விழிப்புணர்வும், ஆரம்பக்கட்ட பரிசோதனைகளும் அவசியம் என்றார்.

Leave a Reply