நவராத்திரியின் போது வீட்டில் கொலு வைத்து அம்பிகையை வழிபடுகிறோம். கொலு பொம்மைகள், வாழ்விற்கான நல்ல படிப்பினைகளை தருகிறது.

கொலு என்பதற்கு அழகு என்பது பொருள். பராசக்தி பலவிதமான கோலங்களில் அழகுடன் வீற்றிருப்பதால் ‘கொலு’ என்று பெயர் உண்டானது.
கொலு வைப்பதற்கு முன் வீட்டை சுத்தமாக்கி, வண்ணக் கோலங்களால் அழகு படுத்த வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது அவசியம். மரப்பலகையால் சிறு மண்டபம் அமைத்து அதன் நடுவில் உயரமான பலகையை சிம்மாசனமாக வைக்க வேண்டும். அதன் மீது பட்டுப்புடவை விரித்து, மண் அல்லது உலோகத்தால் ஆன அம்மன் சிலையை வைக்க வேண்டும். சிலை இல்லாவிட்டால் அம்மன் படத்தை வைக்கலாம்.
வலப்புறத்தில் கலசம் வைக்க வேண்டும். கலசத்தையும் அம்மனாக பாவித்து வணங்க வேண்டும். தினமும் மாலையில் அம்மனை அலங்கரிக்கும் போது கலசத்திற்கும் மலரிட்டு வணங்க வேண்டும்.
முதல்படி முதல் ஆறாம்படி வரை ஒரறிவு முதல் ஆறறிவு உயிர்களை அடுக்குதல் வேண்டும். முதல்படியில் புல், செடி, கொடி முதலிய தாவர பொம்மைகளும், இரண்டாம் படியில் சங்கு, சிப்பியாலான பொம்மைகளும், மூன்றாம் படியில் ஈ, எறும்பு முதலிய உயிர்களும், நான்காம் படியில் வண்டு, நண்டு போன்றவையும், ஐந்தாம்படியில் பறவை, மிருகம் போன்றவையும், ஆறாம்படியில் வணிகர், குறவன், பாம்பாட்டி, போலீஸ் போன்ற மனிதர் சிலைகளை அடுக்க வேண்டும். ஏழாம் படியில் முனிவர், மகான் போன்ற உயர்நிலை மனிதர்களையும், எட்டாவது படியில் இந்திரன், குபேரன் போன்ற தேவர்கள், நவக்கிரகங்களையும் வைக்க வேண்டும். ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி போன்ற தெய்வங்களையும் அடுக்க வேண்டும். பொம்மைகள் கிடைக்காவிட்டால், எல்லா படிகளிலும் தெய்வச்சிலைகளை அடுக்கலாம்.
படிகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும். பொதுவாக 5 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் வைப்பர்.
இந்த படிகளைப் போல மனிதனும் வாழ்வில் பல படிநிலைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது. மேல்நோக்கிச் செல்லும் படி போல, மனிதனும் வாழ்வில் உயர வேண்டும் என்பதே கொலுவின் நோக்கம். ஓரறிவாக உயிராக இருந்த நாம், பரிணாம வளர்ச்சியால் தற்போது ஆறறிவு பெற்ற மனிதராகப் பிறந்திருக்கிறோம். இதை பயன்படுத்தி நல்வழியில் வாழ்ந்தால் அம்பிகையின் அருளால் தெய்வ நிலையை அடையலாம் என்பதையே கொலு உணர்த்துகிறது.