புகழ் வணக்கம் | அமரர். செல்லத்துரை கனகரெட்ணம் | 07.12.2025
புகழ் வணக்கம்💐

[ பாலைக்குழி, அடம்பன் )
மண்ணில்: 1946 .09 .19
விண்ணில்: 2025.12.07
இனத்திற்காக உழைத்த மகனாரை (மாவீரர் புலனாய்வுத்துறை கரும்புலி லெப்.கேணல் பூட்டோ / சங்கர் / NO:1) ஈன்றெடுத்த தந்தையே – உன் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் “இனத்திற்காக உழைத்தவரை இன்னலின்றி வாழவைப்போம் துயர்பகிர்வோர்.
-போராளிகள் நலன்புரிச் சங்கம் மன்னார் மாவட்டம்





பூட்டோவின் அப்பா
விஞ்ச முடியாத
கைநுட்ப நேர்த்தி கொண்ட
ராஜா அண்ணன்
Hi, ராஜா அண்ணன்
என்று , உற்சாகம் ததும்ப நாங்கள் கூப்பிடும் மனிதர்.
Drummer ராஜா
கரும்புலி மாவீரனின் தந்தை.
யூலியன் என்ற
பூட்டோ வின் தந்தையும் தாயும் இருவருமே துடிப்பும், கொண்டாட்டமும் மிக்கவர்கள்.
அது 1985 /86 ஆம் ஆண்டு காலப் பகுதி.
தளபதி விக்டர், ராதா,அசோக், வேணு ,சுபன், லக்ஸ்மன் ,ஜான்
மற்றும் இளநிலை தபதிகள் தொடக்கம் சாதாரண போராளிகள் வரை நேசத்தோடு பழகியவர்கள்.
மறிப்புச் சண்டையில் நிற்போம், பனம் வடலி,
ஆலமரத்து தூர் , குளக்கட்டு,
வயல் வரம்பு, வாய்க்கால்
இவைகள்தான் சாறம் கட்டிய எமக்கு காப்பரண்களாக இருந்தன.
ஊர் எல்லையில் வைத்து இராணுவத்தை மறித்து அடிபடுவோம்.
எதிரி,
தள்ளாடி இராணுவ முகாமிலிருந்து கனரக மோட்டார், பீரங்கி எறிகணைளால் விளாசித் தள்ளுவான்.
ஊர்ச்சனம், பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்திடுவார்கள்.
பின்னணி மருத்துவ ஏற்பாடு இல்லை, உணவு வழங்கல் எதுவும் இருப்தில்லை.
ஊர்திகள் இல்லை.
ஓட்டுமாவு தொடக்கம் கோடாலி வரை, அதனையும் தாண்டி
எல்லாமே மக்கள்தான்.
மக்கள் என்ற கடலில் வாழும் மீன்கள்தான்
கெரில்லாப் போராளிகள்.
அன்றைய எமது தாக்குதல்களும் கெரில்லா போர்முறையைத் தழுவியே இருந்தது.
அத்தகைய தருணங்களில்
தூரத்தில் ஒற்றைச் சைக்கிள் தெரியும்….
ராஜா அண்ணர் இளநீர் குலையோடு வருவார்…..
வெட்டித்தருவர்.
சீவுவதில் ஒரு Art இருக்கும். சிரித்துச் சிரித்து மிக நேர்தியாக இளநீர் சீவுவார்.
மாலையானதும்
பேபி அக்கா யூலியனின் அம்மா தூரத்தில் நிற்பா.
யூலியன் கையில் பிளாஷ்க்குடன் வருவான்.
ஒல்லிக்குச்சி உடம்பு…
சைக்கிள் எட்டாது….
கவட்டக்கால் ஓட்டமும், துடியாட்டமும்
எங்களை பார்ப்பதற்காகவே சுழன்றுகொண்டு திரிவான்.
காற்சடையும், வெள்ளைக் கலரில் ஷேட் டும் அணிந்திருப்பான்.
ரொட்டியோடு வருவான்
அசோக் மாமா…இந்தாங்க. ..
அம்மா தந்துவிட்டாங்க…
ஷெல்லும், ரவைக்களும் கூவிவரும்.
கவனமடா யூலியன்..
படுடா யூலியன் …
கலர் சட்டையோடா வாடா…
இல்லாட்டி இங்கால வராத என்று
வெருட்டி கலைப்போம்.
சற்றுநேரத்தில்,
மாற்று உடுப்போட,
பனங்காப் பணியாரத்தோட வருவான்.
அப்பாவும் ,அம்மாவும்
சேர்ந்து சுட்டுத் தந்தாங்க என்பான்.
ஆர்வம் ,பயமின்மை
பதுங்கிப் பதுங்கி எமது பதுங்கிடம் நோக்கி வரும்
திகில் அனுபவம்,
யூலியனுக்கு கரும்புலி லெப் கேணல் பூட்டோவுக்கான அத்திவாரமாகியதோ என்னவோ.
ராஜா அண்ணன் ,பேபி அக்கா இருவருமே
அவனை வார்த்துத் தேசத்தலைவர் கையில் தந்தார்கள்
விக்டர் அண்ணாவின் வீரச்சாவு
சேதியை கேட்டவுடன்…
பேபி அக்கா சத்தம்போட்டு அழுதா…
யூலியன் அம்மாவின் இடுப்பளவு உயரத்தில் அணைத்தபடி விறைத்துப் போய் நின்றான்.
ராதா, அசோக் இவர்கள்
வீரச்சாவு செய்தி உலுப்பி எடுத்துப் போட்டது.
அவர்களோடு செல்லமாய் விளையாடிய சிறுவன்தான்
நம்பர் வண் பூட்டோ.
இந்தியப்படைகளுடன்
நேருக்கு நேர் வாக்குவாதப்பட்டார் பூட்டோவின் தாய்.
தண்ணீர் கேட்ட
இந்திய படையதிகாரி
லெப் கேணல் டிலோன் இற்கு…
முதல்ல.. எங்கட
திலீபனுக்கு தண்ணி குடுத்திட்டு வா…தர்றோம், என்று முகத்துக்கு முன்னால்
சீறினார் பூட்டோவின்
தாயான பேபி அக்கா.
அவரும் நம்மை பிரிந்துவிட்டார்.
ராஜா அண்ணன், போராளிகளின் கோல்சர் சரிசெய்து,
சப்பாத்து தச்சுக் கொடுத்து,
விதம் விதமான உணவு தயாரித்துக் கொடுத்து,
ட்றம் செற் ஒன்றினை
மிக நேர்த்தியாக தன் கைப்பக்குவத்தால் செய்து தந்தவர் ராஜா அண்ணன்.
ஒரு குறடு
ஒரு ஸ்குறூ ட்றைவர்,
சில ஸ்குறூ ஆணிகள்
போதும்,மீதியை எப்பாடுபட்டாவது தேடிக்கொள்வார்.
பூட்டோவும்
எப்பாடு பட்டாவது,
களத்தில் தனித்து நின்று சாதித்துவிட்டே திரும்புவான்.
தோல் பதனிட்டு,
தகரம் வெட்டி விளிம்பு மடித்து,வளைத்து, நெளித்து
திரட் ஆணிகளால் இறுக்கி,
கம்பிளை பொறுக்கிக் கொண்டுவந்து ஸ்பிறிங்காக உருட்டி எடுத்து, வர்ணம் தீட்டி என தேவைப்படும் பொருள் ,செயல் யாவும்
ஓடையென ஓடிக்கொண்டே இருக்கும்.
சிறிலங்கா அரசின் பொருண்மியத்தடை இவரை அண்டியதுமில்லை.
மேடையில் பரப்பி அடுக்கி வைத்திருக்கும்
அத்தனை பக்க இசை தாளக் கருவிகளையும், தரம்குறையாமல்
செய்து முடிப்பதோடு.
சுருண்ட தலைமுடியை
ஒரு சிலுப்பு சிலுப்பி
வெஸ்ட்ரேர்ன் வாத்தியக் கலைஞர் போல் வாசித்துக்காட்டும்
அதிமாக கலைஞன்
பூட்டோவின் தந்தை
ராஜா அண்ணன்.
இன்னும் தன்னுள் இருந்த கைநுட்ப வல்லாண்மையால், எமக்கு எத்தனை வகைகளில் உதவிய தேசப்பற்றாளன் பூட்டோவின் அப்பா ராஜா அண்ணன்.
சென்று மறைந்துவிட்டார்.
பூட்டோவை
பேபி அக்காவைச் சந்திக்கச் சென்றுவிட்டார்.
இம்முறை
மாவீரர் நாள் விடிவினை பெற்றுத்தரும் என்ற
உறுதிப்பாட்டைத் தந்தாக அவர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
நன்றி ராஜா அண்ணன்.
அ.சுரேஷ் (மன்னார்)
09.12.2025
