“சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு அழுத்தம் வழங்குங்கள்.” – தமிழகத் தலைவர்களிடம் நேரடியாக வலியுறுத்தவுள்ள தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள்.

17-12-2025 | சென்னை

தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ண உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை வழங்குமாறு வலியுறுத்தி தமிழக அரசியல் தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுப்பதற்காகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினர் சென்னையை சென்றடைந்துள்ளனர்.

சென்னையை சென்றடைந்துள்ள குழுவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், க.சுகாஷ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் ந.காண்டீபன் ஆகியோர் அடங்குகின்றனர்.

இவ்விஜயம் தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கூறியிருப்பதாவது,

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு ‘ஏக்கிய இராச்சிய’ அரசியலமைப்பினைத் திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதனைத் தடுத்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ண உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் பிரயோகிக்கவேண்டும்.

அந்தவகையில் பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசு இவ்விடயத்தில் இலங்கை மீது வலுவான அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டும். அந்த நிலையை ஏற்படுத்துவதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் இணைந்து குரலெழுப்பவேண்டிய அவசரத்தேவை எழுந்துள்ளது.

இந்நோக்கத்துக்காக இவ்வாரம் சென்னைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து, இவ்விடயங்கள் குறித்துத் தெளிவுபடுத்தவுள்ளோம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

Leave a Reply