தடை செய்யப்பட்ட 250 கிலோகிராம் எடையுடைய கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில், ராமநாதபுரத்திலிருந்து, இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் தமிழக பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அருகே பதுக்கி வைத்திருந்த, தடை செய்யப்பட்ட 250 கிலோகிராம் எடையுடைய கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய ரூபாவில், 10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ளவை என தெரிவிக்கப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட குறித்த கடல் அட்டைகளை மீட்ட கியூ பிரிவு பொலிஸார், அதனை பதுக்கி வைத்த ஒருவரையும் கைது செய்து, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் – சக்கரக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில், கடல் அட்டைகள் பதப்படுத்தி வருவதாக கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை (04.10.2025) இரவு குறித்த பகுதியில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்போது, நகராட்சி குப்பை கிடங்கு அருகே குடோன் அமைத்து அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதப்படுத்தி வந்தமை தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த சோதனை நடவடிக்கையின்போது, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பில், கடல் அட்டைகளை பதப்படுத்திய குழுவினரில் தேவி பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அங்கிருந்த மூவர் தப்பிச் சென்றுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை தேவிபட்டினத்தில் இருந்து வாங்கி வந்து, சக்கர கோட்டை குப்பை கிடங்கு அருகே உள்ள குடோனில் பதப்படுத்தி பின்கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

குறித்த கடல் அட்டைகள் ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply