Thursday, April 2, 2026

“இந்தியாவின் சட்டங்களுக்குக் கட்டுப்பட முடியாவிட்டால், நாட்டை விட்டு வெளியேறுங்கள்” என்று மெட்டா நிறுவனத்தை இந்திய உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

0 comments

அமெரிக்காவை சேர்ந்த, ‘மெட்டா’ நிறுவனத்தின் கீழ், ‘வாட்ஸாப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்’ ஆகிய சமூக வலைதள நிறுவனங்கள் செயல்படுகின்றன. கடந்த 2021ல் வாட்ஸாப் தன் நிறுவனத்தின் தனியுரிமை கொள்கையை மாற்றியது.

அந்த கொள்கையில், ‘மெட்டா குழும நிறுவனங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுடன் உங்கள் தகவல்கள் பகிரப்படும். ஒப்புக்கொண்டால்தான் வாட்ஸாப் பயன்படுத்த முடியும்’ என கூறியிருந்தனர்.

இந்த நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே வாட்ஸாப் செயலியை பயன்படுத்த முடியும் என்ற நிலை உருவானது. இதன் அடிப்படையில் வாட்ஸாப் பயனாளரின், ‘மெட்டா டேட்டா’ எனப்படும், தனிப்பட்ட தரவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

மெட்டா டேட்டா என்பது பயனர்கள் குறித்த தரவுகள் மட்டுமே, அவர்களின் தனிப்பட்ட குறுந்தகவல் பரிமாற்றங்கள் இதில் இடம்பெற்றிருக்காது என நிறுவனம் கூறுகிறது. ஆனால், யாருடன் அரட்டையில் ஈடுபடுகிறீர்கள், எப்போது பேசுகிறீர்கள், எத்தனை முறை பேசுகிறீர்கள், எவ்வளவு நேரம் ஆன்லைனில் இருக்கிறீர்கள், எந்த இடத்தில் இருந்து, எந்த சாதனத்தில் இருந்து ஆகிய தகவல்களை சேகரித்து வழங்குகிறது.

இதன் மூலம் ஒருவரது நடத்தையை கணித்து அவர்களுக்கு ஏற்ற விளம்பரங்களை தோன்ற செய்கிறது. இந்த தகவல்கள் வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுவதை மத்திய அரசு அமைப்பான இந்திய போட்டி ஆணையம் கண்டறிந்தது. நியாயமான தொழில் போட்டியை உறுதி செய்வதே இந்த அமைப்பின் பணி.

அவர்கள் தங்கள் விசாரணையில், ‘இந்தியாவில் மிகப்பெரிய சந்தை வைத்துள்ள வாட்ஸாப் பயனர்களுக்கு தேர்வு செய்யும் உரிமையை வழங்காமல், தரவு பகிர்வை கட்டாயமாக்கியது. இதனால் போட்டி சட்டம் மீறப்பட்டுள்ளது’ என கூறி, கடந்த 2024ல் 213 கோடி ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதை எதிர்த்து வாட்ஸாப் மற்றும் மெட்டா நிறுவனம் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டது. அவர்கள் போட்டி ஆணையத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை நாடினர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மல்யா பக்சி மற்றும் விபுல் பஞ்சோலி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்தியாவில் செயல்படும் எந்த வெளிநாட்டு நிறுவனமும், நாட்டின் அரசியல்சாசன சட்டத்திற்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும். அந்த அடிப்படை நிபந்தனையை ஏற்க முடியாவிட்டால், இந்தியாவில் செயல்படுவதற்கு உரிமை இல்லை. அவர்கள் வெளியேறலாம்.

குடிமக்களின் தனியுரிமை, எவ்வித சூழலிலும் சமரசம் செய்யக்கூடிய விஷயம் அல்ல. பயனர்களின் தரவுகள் பகிரப்படுவதை அனுமதிக்க முடியாது. வாட்ஸாப்பின் தனிஉரிமை கொள்கையின் மொழி, சாதாரண மக்களுக்கு புரியாத அளவு சிக்கலாக அமைந்துள்ளது.

தெருவில் பழம் விற்கும் ஒரு ஏழை பெண் அல்லது கிராமப்புறத்தில் வாழும் ஒரு சாதாரண பயனர், இத்தகைய சட்ட மொழியில் அமைந்த ‘ஒப்புதல்’ மற்றும் ‘விலகல்’ நிபந்தனைகளை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும். இப்படி உருவாக்கப்படும் தேர்வு, உண்மையான தேர்வாக இருக்க முடியாது. இங்கு பயனரால் வழங்கப்படும் சம்மதம், அறிவுப்பூர்வமான சம்மதம் அல்ல.

தனிப்பட்ட உரையாடல்கள் மறைக்கப்படுவதாக கூறப்பட்டாலும், ‘மெட்டா டேட்டா’ உள்ளிட்ட தகவல்கள் மூலம் பயனர்களின் நடத்தை, விருப்பங்களை கண்காணிக்கும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற தகவல்களை வைத்து, நடத்தை மற்றும் வணிகம் சார்ந்த சுரண்டல் நடைபெற்றால், அது குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நேரடியாக மீறும் செயல். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இதைத் தொடர்ந்து, ‘வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை மெட்டா நிறுவனத்துக்கு வாட்ஸாப் தகவல்களை பகிர கூடாது’ என இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00