தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை: பா.ஜ.க
திருப்பூர், தமிழகம்
மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சரும், பா.ஜ., தமிழக தேர்தல் இணை பொறுப்பாளருமான முரளிதர் மோகல் நேற்று திருப்பூரில் அளித்த பேட்டி:

கோவில்களின் இந்திய தலைநகராக தமிழகம் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், இங்கு இருக்கும் கோவில்களின் நிர்வாகம் அப்படி இல்லை. மத்திய பட்ஜெட்டில், தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் அரசு இருந்த போது, 2014ம் ஆண்டு வரை தமிழகத்துக்கு 94,000 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டது. ஆனால், மோடியின் ஆட்சியில் 4 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் அமைக்க, மாநிலங்களில் இருந்து நிலம் கையகப்படுத்த வேண்டும்; அப்பணியை மாநில அரசு தான் செய்ய வேண்டும். ஆனால், தமிழக அரசு அதை விரைந்து செய்வதில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பின், அது வேகப்படுத்தப்படும்.
தமிழகத்தில் இரட்டை இன்ஜின் அரசு தான் வேண்டும். மதுக்கடை, போதை பொருள் புழக்கம், அதனால் சட்டம் – ஒழுங்கு கெட்டு போய் உள்ளது. குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்து வருகிறது. தே.ஜ., கூட்டணி ஆட்சியில் இதெல்லாம் இருக்காது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த மூன்று ஆண்டில், 61 சதவீதம் அதிகரித்துள்ளது. பெண்கள் மீதான வன்முறை 50.7 சதவீதம் அதிகரித்துள்ளது. கூட்டணி தொடர்பாக, த.வெ.க.,வுடன் பா.ஜ., பேச்சு நடத்தவே இல்லை. தே.ஜ., கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு நடக்கிறது. விரைவில் தீர்வு எட்டப்பட்டு அறிவிக்கப்படும். இவ்வாறு முரளிதர் மோகல் கூறினார்.