Wednesday, April 1, 2026

தமிழக அரசு நிலம் ஒதுக்குவதில் தாமதம் காட்டுவது, ரயில்வே திட்டங்களுக்குத் தடையாக உள்ளது.

0 comments

தமிழகத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிலுவையில் இருப்பதால், ரயில்வே திட்டங்களில் தாமதம் ஏற்பட்டு வருவதாக, முதல்வர் ஸ்டாலினுக்கு, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான தாமதத்திற்கு, மத்திய அரசு முழுமையாக இழப்பீடு நிதி ஒதுக்காததே காரணம் என, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

அதற்கு பதில் அளித்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலத்தில், 24 சதவீதம் மட்டுமே, இதுவரை ஒப்படைக்கப்பட்டு உள்ளது; அதாவது, 4,326 ஹெக்டேரில், 1,052 ஹெக்டேர் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதற்காக தமிழக அரசுக்கு 1,465 கோடி ரூபாய் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது.

பல முக்கியமான ரயில்வே திட்டங்கள், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே பின்னடைவை சந்தித்து வருகின்றன. நிதி பற்றாக்குறையால் திட்டங்கள் தடைபடவில்லை.

ரயில்வே திட்டங்களுக்கு, நிலம் கையகப்படுத்துதலே முக்கிய தடையாக உள்ளது. மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக துாத்துக்குடிக்கு, புதிய பாதை அமைக்கும் திட்டத்துக்கு, 91 சதவீதம் நிலம் இன்னும் கையகப்படுத்தி தரப்படவில்லை.

திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை புதிய பாதை திட்டத்திற்கு, 86 சதவீதம் நிலம் தரப்படவில்லை.

ராமேஸ்வரம் – தனுஷ்கோடி புதிய பாதை திட்டத்துக்கு, 2019ம் ஆண்டு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

ஆனால், மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல், இதுவரை துவங்கப்படவில்லை.

இத்தகைய சவால்கள் இருந்த போதிலும், தமிழகத்தில் பல புதிய ரயில் பாதைகள், இரட்டை பாதைகள், மூன்றாம் மற்றும் நான்காம் பாதை திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், தமிழகத்தில் மொத்தம் 77 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.

கடந்த 2014 முதல், மாநிலத்தில் 1,350 கி.மீ., புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன; 97 சதவீதம் மின்மயமாக்கல் பணி முடிந்துள்ளது.

ஒன்பது ‘வந்தே பாரத்’ ரயில்கள், ஒன்பது ‘அமிரித் பாரத்’ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக ரயில்வே உட்கட்டமைப்பு மேம்பாட்டை வேகப்படுத்த, மத்திய அரசு தயாராகவும் உறுதியாகவும் உள்ளது. இந்த திட்டங்களை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்க்க, மாநில அரசின் நேர்மையான ஆதரவும், ஒத்துழைப்பும் மிக அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00