இந்திய விமானப்படை வீரர் கொலை வழக்கு; கைது செய்யப்பட்ட இருவரை நீதிமன்றம் விடுதலை செய்தது!

புதுடில்லி

இந்திய விமானப்படை ஊழியராக பணிபுரிந்தவர் அருண், 33. இவர், 2014ல் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக, பிராம் பிரகாஷ் என்ற சன்னி, காஜன் சிங் என்ற ரேணு என, இருவர் கைது செய்யப்பட்டனர்.

அருணின் உடல் டில்லி துவாரகாவில் உள்ள ஜல்போர்டு அருகே கண்டு பிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அவர் சாலை விபத்தில் இறந்திருக்கலாம் என, கருதப்பட்டது. பின்னர், கொலை வழக்காக மாற்றப்பட்டது.

அதாவது, 2014 டிசம்பரில், குற்றம் சாட்ட இருவரும், அருணின் தலையில் பலமுறை கல்லால் தாக்கியும், பின், அவர் மீது வேனை ஏற்றியும் கொன்றதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அத்துடன், இறந்தவரின் மொபைல் போனை அப்புறப்படுத்தி, வாகனத்தில் இருந்த ரத்தக் கறைகளைக் கழுவி சாட்சியங்களை அழிக்க, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் முயன்றதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

அதனால், துவாரகா வடக்கு காவல் நிலையத்தில், இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும், இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த டில்லி கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி குர்மொகினா கவுர் அளித்த தீர்ப்பு:

குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுகளை, போலீஸ் தரப்பில் சந்தேகமின்றி நிரூபிக்க தவறி விட்டனர். கொல்லப்பட்டவரை தாக்கப் பயன்படுத்தியதாக கூறப்படும் கல் அல்லது செங்கல் கண்டு பிடிக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள், கார் டயர்களை கழுவியது குறித்தும், எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

விமானப்படை ஊழியர் அருணை இருவரும் கார் ஏற்றி கொன்றது தொடர்பாக, எந்த ஆதாரமும் சேகரிக்கப்படவில்லை. எனவே, குற்றம் சுமத்தப்பட்ட இருவரையும் விடுவிக்கிறேன். இந்த வழக்கில் சூழ்நிலைகளின் சங்கிலி முழுமை அடையவில்லை.

புலன் விசாரணையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகள் நியாயமான சந்தேகத்தை உருவாக்கியுள்ளன சூழ்நிலை சாட்சியங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றத்தை ஊகிக்க போதுமானதாக இல்லை. அதனால், விடுவிக்கப் படுகின்றனர். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்