டி20 உலகக் கோப்பை: அயர்லாந்தை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

கொழும்பு

‘டி-20’ உலக கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 67 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.

இலங்கையின் கொழும்புவில் நடந்த, ‘டி-20’ உலக கோப்பை தொடருக்கான ‘பி’ பிரிவு லீக் போட்டியில் அயர்லாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் டிராவிஸ் ஹெட் (6) ஏமாற்றினார். பின் இணைந்த ஜோஷ் இங்லிஸ், கேமரான் கிரீன் ஜோடி நம்பிக்கை தந்தது. மேத்யூ ஹம்ப்ரிஸ் வீசிய 3வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விரட்டினார் இங்லிஸ். பேரி மெக்கார்த்தி பந்தில் வரிசையாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த கிரீன், மார்க் அடேர் பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்த போது கிரீன் (21) அவுட்டானார். ஜார்ஜ் டாக்ரெல் பந்தில் இங்லிஸ் (37) ஆட்டமிழந்தார்.

மேக்ஸ்வெல் (9) சோபிக்கவில்லை. ஹாரி டெக்டர் வீசிய 12வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த மார்கஸ் ஸ்டாய்னிஸ், மார்க் அடேர் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். அபாரமாக ஆடிய ஸ்டாய்னிஸ், 29 பந்தில் 45 ரன் குவித்தார். ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்தது. கூப்பர் கனோலி (11), சேவியர் பார்ட்லெட் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

சவாலான இலக்கை விரட்டிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் (1), ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ ஆனார். ஹாரி டெக்டர் (0) ஏமாற்றினார். நாதன் எல்லிஸ் ‘வேகத்தில்’ ராஸ் அடேர் (12), கர்டிஸ் கேம்பர் (4), பென் காலிட்ஸ் (2) வெளியேறினர். லார்கன் டக்கர் (24), ஜார்ஜ் டாக்ரெல் (41) ஓரளவு கைகொடுத்தனர். மார்க் அடேர் (12), மெக்கார்த்தி (2) நிலைக்கவில்லை.

அயர்லாந்து அணி 16.5 ஓவரில் 115 ரன்னுக்கு சுருண்டு, வரிசையாக 2வது தோல்வியை பெற்றது. ஏற்கனவே இலங்கையிடம் தோற்றது. ஆஸ்திரேலியா சார்பில் எல்லிஸ், ஜாம்பா தலா 4 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை எல்லிஸ் வென்றார்.

ஆஸ்திரேலிய அணியின் ‘ரெகுலர்’ கேப்டன் மிட்சல் மார்ஷ், இடுப்பு பகுதி காயத்தால் நேற்று களமிறங்கவில்லை. இவருக்கு பதிலாக டிராவிஸ் ஹெட் அணியை வழிநடத்தினார். மாட் ரென்ஷா ‘லெவன்’ அணிக்கு தேர்வானார். ஒருவேளை மீதமுள்ள போட்டிகளிலும் மார்ஷ் விளையாட முடியாமல் போனால், மாற்று வீரராக ஸ்டீவ் ஸ்மித்தை களமிறக்க அணியில் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து, விரைவில் ஆஸ்திரேலிய அணியில் இணைய உள்ளார் ஸ்மித்.

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்