டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா சூப்பர் ஓவரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆமதாபாத்
‘டி-20’ உலக கோப்பை போட்டியில், தென் ஆப்ரிக்க அணி, இரண்டாவது ‘சூப்பர் ஓவரில்’ வெற்றி பெற்றது. போராடிய ஆப்கானிஸ்தான் அணி, கடைசி பந்தில் தோற்றது.

குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில், நேற்று நடந்த ‘டி-20’ உலக கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் மோதின. இதில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்கலாம் என்ற நிலையில் ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான், பீல்டிங் செய்தது.
தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக், கேப்டன் மார்க்ரம் (5) ஜோடி துவக்கம் தந்தது. ரிக்கிள்டன், டி காக் என இருவரும் அரைசதம் அடித்தனர். 2வது விக்கெட்டுக்கு 114 ரன் சேர்த்த போது டி காக் (59) அவுட்டானார். ரிக்கிள்டன் 61 ரன்னில் (28 பந்து) அவுட்டானார். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 187/6 ரன் எடுத்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜத்ரன் (12) ஜோடி துவக்கம் தந்தது. ஓமர்ஜாய் (22), கேப்டன் ரஷித் கான் (20) உதவ, குர்பாஸ் 84 ரன் (42 பந்து) எடுத்து வெளியேறினார். ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவரில் 187 ரன்னில் ஆல் அவுட்டாக, போட்டி ‘டை’ (சமன்) ஆனது. நிகிடி 3 விக்கெட் சாய்த்தார்.
வெற்றியாளரை முடிவு செய்ய ‘சூப்பர் ஓவர்’ நடந்தது. இரு அணிக்கும் தலா ஒரு ஓவர் தரப்பட்டன. 3 பேட்டர்கள் விளையாடினர். முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 17/0 ரன் எடுத்தது. அடுத்த வந்த தென் ஆப்ரிக்க அணி 17/1 ரன் எடுக்க, போட்டி மீண்டும் ‘டை’ ஆனது.
ஐ.சி.சி., விதிப்படி வெற்றியாளர் முடிவு செய்யப்படும் வரை, ‘சூப்பர் ஓவர்’ தொடர்ந்து நடத்தப்படும். இதன் படி நடந்த, இரண்டாவது சூப்பர் ஓவரில், முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, 3 பந்தில் 9 ரன் எடுத்தது. அடுத்த 2 பந்தில் அனுபவ மில்லர் 2 சிக்சர் அடித்தார். தென் ஆப்ரிக்கா, 23/0 ரன் (6, 1, 2, 6, 6, 2) எடுத்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு நபி (0) ‘ஷாக்’ கொடுத்தார். மஹாராஜ் வீசிய கடைசி 4 பந்தில் 24 ரன் தேவைப்பட்டன. குர்பாஸ் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்தார். 6வது பந்து ‘வைடாக’ சென்றது. மீண்டும் வீசப்பட்ட கடைசி பந்தில், குர்பாஸ் (18) அவுட்டானார். ஆப்கானிஸ்தான் அணி 19/0 ரன் (0, விக்., 6, 6, 6, 1 வைடு, விக்.,) மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. தொடர்ந்து இரு போட்டியில் தோற்ற ஆப்கானிஸ்தானின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது.
‘டி-20’ உலக கோப்பை போட்டியில் அதிக ரன் எடுத்த தென் ஆப்ரிக்க வீரர் ஆனார் குயின்டன் டி காக் (737). டிவிலியர்ஸ் (717), டுமினி (568) அடுத்து உள்ளனர்.
‘டி-20’ உலக கோப்பை வரலாற்றில் முதன் முறையாக நேற்று, இரண்டு ‘சூப்பர் ஓவர்’ நடந்தது.
ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் நேற்று, முதலில் 42 பந்தில் 84 ரன் எடுத்தார். சர்வதேச ‘டி-20’ல் அதிக அரைசதம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்களில் முதலிடத்தை இப்ராகிம் ஜத்ரனுடன் பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 14 அரைசதம் அடித்தனர்.
* அடுத்து நடந்த இரண்டாவது சூப்பர் ஓவரில், குர்பாஸ் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து வெற்றி நம்பிக்கை தந்தார். இருப்பினும், கடைசி பந்தில் அவுட்டாக, ஆப்கானிஸ்தான் தோற்றது. இந்த சோகத்தில் கண்ணீர் விட்டு அழுதார். சக வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சர்வதேச ‘டி-20’ அரங்கில் 150 போட்டியில் பங்கேற்ற 4வது வீரர் ஆனார் முகமது நபி (150). ‘டாப்-3’ இடத்தில் ஸ்டெர்லிங் (162, அயர்லாந்து), ரோகித் (159, இந்தியா), டாக்ரெல் (156, அயர்லாந்து) உள்ளனர்.
‘டி-20’ உலக கோப்பை அரங்கில் ‘டை’ ஆன ஆறாவது போட்டி ஆனது தென் ஆப்ரிக்கா-ஆப்கானிஸ்தான் மோதல்.
* சர்வதேச ‘டி-20’ல் ‘டை’ ஆன இரு போட்டியிலும் தென் ஆப்ரிக்கா வென்றது.
* ‘டை’ ஆன மூன்று போட்டியில் ஆப்கானிஸ்தான் தோற்றுள்ளது.
சர்வதேச ‘டி-20’ல் இரண்டாவது முறையாக, நேற்று இரண்டு ‘சூப்பர் ஓவர்’ நடந்தது.
* முன்னதாக 2024ல் ஆப்கானிஸ்தான், 2வது ‘சூப்பர் ஓவரில்’ இந்தியாவிடம் வீழ்ந்தது.
* நேற்று மீண்டும், இரண்டாவது ‘சூப்பர் ஓவரில்’ ஆப்கானிஸ்தான் தோற்றது.
தென் ஆப்ரிக்கா (20 ஓவர்) 187/6
ஆப்கானிஸ்தான் (19.4 ஓவர்) 187/10
* சூப்பர் ஓவர் 1
ஆப்கானிஸ்தான் 17/0 | தென் ஆப்ரிக்கா 17/1
* சூப்பர் ஓவர் 2
தென் ஆப்ரிக்கா 23/0 | ஆப்கானிஸ்தான் 19/2