டில்லி மெட்ரோவின் திட்டத்தின் கீழ் மூன்று புதிய வழித்தடங்கள் அமைக்க, டில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது!

புதுடில்லி

டில்லி மெட்ரோவின் 5(ஏ)- கட்ட திட்டத்தின் கீழ் மூன்று புதிய வழித்தடங்கள் அமைக்க, டில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, மாநில அரசும் ஒப்புதல் தந்துள்ளது.

இது, தலைநகரின் மெட்ரோ விரிவாக்கத் திட்டங்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக அமையும். இந்த திட்டத்தில், பார்லி மென்ட் வளாக பகுதிகளான, மத்திய விஸ்டாவை இணைக்கும் ஒரு முக்கிய வழித்தடமும் அடங்கும்.

தலைநகரின் பொது போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்தும், நவீன மயமாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, முதல்வர் ரேகா குப்தா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுபற்றி முதல்வர் ரேகா குப்தா கூறுகையில், ”12,014.91 கோடி ரூபாய் மதிப்பில், 5 (ஏ) திட்ட கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது, தலைநகரில் பொது போக்குவரத்து உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும். திட்ட செலவில், 2,940.46 கோடியை, டில்லி அரசு தனது பங்களிப்பாக வழங்கும்.

”பொது போக்குவரத்து மேம்படுவதன் மூலம், டில்லியில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், காற்றின் தரமும் மேம்படும்,” என்று தெரிவித்தார்.

ஆர்.கே. ஆசிரம மார்க் முதல் இந்திர பிரஸ்தா (சென்ட்ரல் விஸ்டா வழியாக), துக்ளகாபாத் முதல் கலிந்தி குஞ்ச் வரை, மற்றும் ஏரோசிட்டி முதல் இந்திரா காந்தி உள்நாட்டு முனையம் –1 வரை என, மூன்று மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த வழித்தடங்களில், அமைய உள்ள 13 நிலையங்களில், 10 நிலையங்கள் நிலத்தடியிலும், மூன்று உயர்த்தப்பட்ட நிலையங்களிலும் அமையும்.

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்