உத்தரபிரதேசத்தில், குடிபோதை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே புகையிலை தொழிலதிபரின் மகன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
உ.பி., இந்தியா -13 பிப்ரவரி 2026
உத்தர பிரதேசத்தில், குடிபோதையில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில், புகையிலை அதிபரின் மகன் கைதான சில மணி நேரங்களிலேயே ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

உ.பி., கான்பூரின் வி.ஐ.பி., சாலையில் உள்ள வணிக வளாகம் அருகே, கடந்த 8ம் தேதி அதிவேகமாக வந்த, ‘லம்போர்கினி’ சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் ந டந்து சென்ற பாதசாரிகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ஆறு பேர் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய இளைஞரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் பிரபல புகையிலை அதிபர் கே.கே.மிஸ்ராவின் மகன் ஷிவம் மிஸ்ரா, 35, என்பது தெரிந்தது.
குடிபோதையில், அதிவேகமாக கார் ஓட்டிவந்ததால், இந்த விபத்து ந டந்ததாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இதையடுத்து ஷிவம் மிஸ்ரா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரது சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
அதே சமயம், காரை ஷிவம் மிஸ்ரா ஓட்டவில்லை என்றும், டிரைவர் தான் ஓட்டிச் சென்றார் என்றும் அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சிகிச்சைக்காக டில்லியில் உள்ள மருத்துவமனையில் ஷிவம் மிஸ்ரா அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்தச் சூழலில், காரை ஓட்டிச் சென்றதாக இவ்வழக்கில் டிரைவர் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
ஆனால், மிஸ்ரா தான் குற்றவாளி என்றும், அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் போலீஸ் தரப்பு நீதிமன்றத்தில் ஆணித்தரமாக தெரிவித்தது.
இதையடுத்து, சரணடையும் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில், ஷிவம் மிஸ்ராவை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை, கான்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், 14 நாள் நீதிமன்ற கா வலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரினர்.
அப்போது ஷிவம் மிஸ்ரா தரப்பில் காரை ஓட்டியது அவர் அல்ல என வாதிடப்பட்டது. மேலும், உடனடியாக ஜாமின் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், ஷிவம் மிஸ்ரா தான் காரை ஓட்டிச் சென்றார் என்பதை போலீஸ் தரப்பு நிரூபிக்க தவறிவிட்டதாக கூறியது. அத்துடன் 20,000 ரூபாய் பிணை தொகையில், அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.