டி20 உலகக் கோப்பை: நமீபியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
டெல்லி, இந்தியா- 13 பிப்ரவரி 2026
‘டி-20’ உலக கோப்பை லீக் போட்டியில் இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா அரைசதம் விளாச, இந்திய அணி 93 ரன் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நமீபியா மோதின. ‘டாஸ்’ வென்ற நமீபிய கேப்டன் ஜெரார்டு எராஸ்மஸ், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
இஷான் ரன் மழை: இந்திய அணிக்கு சாம்சன் அதிரடி துவக்கம் தந்தார். ஷிகோங்கோ ஓவரில் வரிசையாக 6,6,4 என விளாசிய சாம்சன் (22), அடுத்த பந்தில் அவுட்டாகி வாய்ப்பை மீண்டும் வீணாக்கினார்.
இஷான் கிஷான் இஷ்டம் போல அடித்து நொறுக்கினார். ஸ்மிட் ஓவரில் (6வது) தொடர்ந்து 4 சிக்சர், 1 பவுண்டரி அடிக்க, மொத்தம் 28 ரன் எடுக்கப்பட்டன. 20 பந்தில் அரைசதம் எட்டிய இஷான், 61 ரன்னுக்கு (6×4, 5×6) எராஸ்மஸ் பந்தில் அவுட்டானார். கேப்டன் சூர்யகுமார் (12), திலக் வர்மா (25) நிலைக்கவில்லை.
11 பந்து, 4 ரன், 5 விக்.,: போட்டியின் 19வது ஓவரை வீசிய கேப்டன் எராஸ்மஸ் ‘சுழல்’ ஜாலம் நிகழ்த்தினார். முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய பாண்ட்யா, 27 பந்தில் அரைசதம் எட்டினார். 2வது பந்தை துாக்கி அடித்தார். எல்லையில் லெய்ச்சர் சாமர்த்தியமாக ‘கேட்ச்’ பிடிக்க, பாண்ட்யா (52 ரன், 4X4, 4X6) நடையை கட்டினார். 3வது பந்தில் துபே (23) ரன் அவுட்டானார். 6வது பந்தில் அக்சர் படேல் (0) போல்டாக, ஒரே ஓவரில் 3 விக்கெட் சரிந்தன. அடுத்த ஓவரில் ரிங்கு சிங் (1), அர்ஷ்தீப் சிங் (2) வெளியேறினர்.
இந்தியா 7 ஓவரில் 104/1 என வலுவாக இருந்தது. ஆனால், நமீபிய ‘ஸ்பின்னர்’கள் பிடியை இறுக்க, ஸ்கோர் வேகம் குறைந்தது. கடைசி 11 பந்தில் 4 ரன்னுக்கு 5 விக்கெட் சரிந்தன. இந்திய அணி 20 ஓவரில் 209/9 ரன் குவித்தது.
வருண் ‘மேஜிக்’: கடின இலக்கை விரட்டிய நமீபிய அணி, 7 ஓவரில் 67/1 ரன் எடுத்து மிரட்டியது. இந்த சமயத்தில் வருண் சக்ரவர்த்தி திருப்பம் ஏற்படுத்தினார். இவரது ‘சுழலில்’ ஸ்டீன்கேம்ப் (29) போல்டானார். தனது அடுத்த ஓவரில் ஈடன் (13), ஸ்மிட்டை (0) வரிசையாக அவுட்டாக்கினார். கேப்டன் எராஸ்மஸ், 18 ரன் எடுத்தார். பாண்ட்யா ஓவரில் ஸ்கோல்ட்ஸ் (4), ஷிகாங்கோ (0) தொடர்ந்து அவுட்டாகினர். அடுத்து வந்த ஹெய்ங்கோ தடுத்து ஆட, ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது. நமீபிய அணி 18.2 ஓவரில் 116 ரன்னுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது.
ஏற்கனவே அமெரிக்காவை வென்ற இந்தியா, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது. ஆட்டநாயகன் விருதை ஹர்திக் பாண்ட்யா (52 ரன், 2 விக்.,) வென்றார்.
‘டி-20’ உலக கோப்பை வரலாற்றில் அதிவேக அரைசதம் விளாசிய இந்திய வீரர்கள் வரிசையில் 4வது இடத்தை யுவராஜ் சிங்குடன் (எதிர்: ஆஸி., 2007, டர்பன்) பகிர்ந்து கொண்டார் இஷான் கிஷான். இருவரும் தலா 20 பந்தில் எட்டினர். முதல் மூன்று இடங்களில் யுவராஜ் சிங் (12 பந்து, எதிர்: இங்கிலாந்து, 2007, டர்பன்), ராகுல் (18 பந்து, எதிர்: ஸ்காட்லாந்து, 2021, துபாய்), ரோகித் சர்மா (19 பந்து, எதிர்: ஆஸி., 2024, செயின்ட் லுாசியா) உள்ளனர்.
‘டி-20’ உலக கோப்பை அரங்கில், இந்திய அணியில் அறிமுகமான மூத்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார் சஞ்சு சாம்சன் (31 ஆண்டு, 93 நாள்). முதலிடத்தில் அமித் மிஸ்ரா (31 ஆண்டு, 117 நாள், எதிர்: பாக்., 2014, மிர்புர்), மூன்றாவது இடத்தில் சூர்யகுமார் யாதவ் (31 ஆண்டு, 40 நாள், எதிர்: பாக்., துபாய், 2021) உள்ளனர்.
சர்வதேச ‘டி-20’ வரலாற்றில், அதிக முறை 200 அல்லது அதற்கு மேல் ரன் குவித்த அணிகளுக்கான பட்டியலில் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது. இதுவரை 47 முறை இம்மைல்கல்லை எட்டியது. அடுத்த இரு இடங்களில் தென் ஆப்ரிக்கா (29 முறை), நியூசிலாந்து (28) அணிகள் உள்ளன.
* ‘டி-20’ உலக கோப்பை அரங்கில் இந்திய அணி 4வது முறையாக (218/4, 210/2, 209/9, 205/5) ஒரு இன்னிங்சில் 200 அல்லது அதற்கு மேல் ரன் குவித்தது.
சர்வதேச ‘டி-20’ அரங்கில், ‘பவர்-பிளே’ ஓவரின் முடிவில் (1-6) இந்திய அணி தனது 3வது அதிகபட்ச ரன்னை (86/1) பெற்றது. ஏற்கனவே இங்கிலாந்து (95/1, மும்பை, 2025), நியூசிலாந்து (94/2, கவுகாத்தி, 2026) அணிகளுக்கு எதிராக ‘பவர்-பிளே’ ஓவரில் அதிக ரன் குவித்தது இந்தியா.
* ‘டி-20’ உலக கோப்பை வரலாற்றில், ‘பவர்-பிளே’ ஓவரில் அதிக ரன் குவித்த அணிகளுக்கான பட்டியலில் 4வது இடம் பிடித்தது இந்தியா. முதல் மூன்று இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் (92/1, எதிர்: ஆப்கன், 2024, செயின்ட் லுாசியா), நெதர்லாந்து (91/1, எதிர்: அயர்லாந்து, 2014, சில்ஹெட்), இங்கிலாந்து (89/3, எதிர்: தெ.ஆப்., 2016, மும்பை) அணிகள் உள்ளன.
சர்வதேச ‘டி-20’ வரலாற்றில், முதல் 6 ஓவருக்குள் அதிகமுறை அரைசதம் விளாசிய இந்திய வீரர்கள் வரிசையில் 2வது இடத்தை ரோகித் சர்மாவுடன் பகிர்ந்து கொண்டார் இஷான் கிஷான். இருவரும் தலா 2 முறை இம்மைல்கல்லை எட்டினர். முதலிடத்தில் அபிஷேக் சர்மா (3 முறை) உள்ளார்.
* ‘டி-20’ உலக கோப்பை அரங்கில், முதல் 6 ஓவருக்குள் அரைசதம் விளாசிய 3வது இந்திய வீரரானார் இஷான் கிஷான். ஏற்கனவே ரோகித் (எதிர்: ஆஸி., 2024, செயின்ட் லுாசியா), ராகுல் (எதிர்: ஸ்காட்லாந்து, 2021, துபாய்) இச்சாதனை படைத்திருந்தனர்.
‘டி-20’ உலக கோப்பை அரங்கில் இந்திய அணி ரன் அடிப்படையில் தனது பெரிய வெற்றியை (93 ரன்) நேற்று பதிவு செய்தது. இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக 90 ரன்னில் (கொழும்பு, 2012) வென்றிருந்தது.
‘டி-20’ உலக கோப்பை அரங்கில் நேற்று இந்திய அணி தொடர்ந்து 10வது வெற்றியை (2024-26) பெற்றது. இப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த இடத்தில் தென் ஆப்ரிக்கா (தொடர்ந்து 8 வெற்றி, 2024) உள்ளது.