அரியக்குடி அரசுப் பள்ளி மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய மினி செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தி சாதனை படைத்தனர்.

தமிழ்நாடு – 14 பிப்ரவரி 2026

சிவகங்கை மாவட்டம் அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 2 மாணவர்கள் 12 பேர் சேர்ந்து தயாரித்த ‛சாட்டிலைட்’டை விண்ணில் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன், மாங்குடி எம்.எல்.ஏ., முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து, தலைமை ஆசிரியர் ஜான்பிரிட்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை வீடியோ வெளியிட்டு சாட்டிலைட் தயாரித்த மாணவர்களை பாராட்டினார்.

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: தமிழக விஞ்ஞானிகள் விஸ்வேஸ்வரன், ஜி.டி., நாயுடு பெயரை இணைத்து ‛விகோசாட்’ என்ற மினி சாட்டிலைட் தயாரிக்கும் ஆர்வம் 2 ஆண்டுகளாக இருந்தது. எஸ்.எம்.என்.ஜி. அகாடமி ஆசிரியர் அப்துல் கயூம் உதவியுடன் 6 மாதமாக சாட்டிலைட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டோம்.

500 கிராம் எடை கொண்ட இந்த சாட்டிலைட் கியூப் வடிவில் இருக்கும். எஸ்.டி.எம்.,32 என்ற கன்ட்ரோலர் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. 2 பாகங்களாக சாட்டிலைட் பிரிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் தட்ப வெப்பம், அழுத்தம், ஈரப்பதம், யு.வி., மற்றும் வாயு ஆகியவற்றிற்கான 5 சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. மறுபுறம் தாவரங்களுடன் கூடிய பயாலஜி லேப் அமைக்கப்பட்டுள்ளது. சாட்டிலைட், ஹீலியம் காஸ் நிரப்பிய லெதர் பலுான் மூலம் வளிமண்டலத்தின் இரண்டாவது முக்கிய அடுக்கான ஸ்ரேட்டோஸ்பியருக்கு அனுப்பப்பட்டது.

2 மணி நேரம் பயணம் செய்து 22 கி.மீ., உயரத்தில் 30 முதல் 40 நிமிடம் வரை ஸ்ரேட்டோஸ்பியரில் இருந்தது. பலுான் வெடித்து பாராசூட் மூலம் கீழே வந்தது. இதன் மூலம் புவி வெப்பமயமாதலை தடுக்க முடியும். ஸ்ட்ரேட்டோஸ்பியர் தன்மை குறித்து அறிய முடியும். சாட்டிலைட்டில் அனுப்பப்பட்ட தாவரங்களில் ஏற்படும் மாற்றத்தை அறிவதன் மூலம் விவசாயிகளுக்கும் பயாலஜி மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வரும் காலங்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் மிகக் குறைந்த செலவில் ஆய்வு செய்ய இந்த சாட்டிலைட்டை பயன்படுத்த முடியும் என்றனர்.

தரை இறங்கிய சேட்டிலைட் மாணவர்கள் அனுப்பிய ‛விகோசாட்’ சாட்டிலைட் சிவகங்கை அடுத்த கூட்டுறவுபட்டி அருகே தரை இறங்கியது. பதிவாகியுள்ள தகவல் பயாலஜிக்கல் டெஸ்ட் செய்யப்பட்டு ஆய்வறிக்கையில் தெரிய வரும்.

Leave a Reply