இந்தியப் பிரதமர் மோடி சமூக ஊடகங்களில், “புல்வாமாவில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களை நான் நினைவில் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

புது டெல்லி, இந்தியா – 14 பிப்ரவரி 2026

புல்வாமா தாக்குதலின் 7ம் ஆண்டு நினைவு நாள் இன்று (பிப்., 14) அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு இதே நாளில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த துயர சம்பவத்தில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது.

இந்நிலையில் இன்று நினைவு நாளையொட்டி சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2019ம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் தங்கள் இன்னுயிரை ஈந்த துணிச்சலான வீரர்களை நினைவு கூர்கிறேன்.

அவர்களது தேசத்திற்கான சேவை நம் உணர்வில் என்றும் பதிந்திருக்கும். ஒவ்வொரு இந்தியர்களும் அவர்களின் துணிச்சலை கண்டு உத்வேகம் பெறுகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

துணை ஜனாதிபதி, சிபிஆர்:

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் தங்கள் உயிரை தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அவர்களின் தியாகம் என்றைக்கு நாட்டு மக்களின் மனதில் நிலைத்திருக்கும். வளர்ச்சி அடைந்த மற்றும் பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சர், அமித்ஷா

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த நமது துணிச்சலான வீரர்களை நான் நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். பயங்கரவாதம் மனிதகுலத்தின் மிகப்பெரிய எதிரி.

அதை முற்றிலுமாக ஒழிக்க இந்தியா உறுதியாக உள்ளது. பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் நமது பாதுகாப்புப் படையினரின் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்கு இந்த நாடு என்றென்றும் கடமைப்பட்டு உள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங்

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த துணிச்சலான சிஆர்பிஎப் வீரர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் நினைவைப் போற்றுவதிலும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவாகவும் நமது தேசம் இருக்கிறது.

அவர்களின் தியாகம், நமது தேசத்திற்கு பயங்கரவாதத்தால் ஏற்படும் கடுமையான அச்சுறுத்தல்களை நினைவூட்டுவதாக உள்ளது. பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்துப் போராடி ஒழிப்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. இந்தியாவை பாதுகாப்பாக மாற்றுவதற்காக எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது.

Leave a Reply