உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், 2021ல் மைத்துனர் வீட்டில் இருந்து சொந்த ஊருக்கு தன் 14 வயது மகளுடன் சென்றார். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் சென்ற அசோக், பவன், ஆகாஷ் ஆகியோர் 14 வயது சிறுமியை வீட்டில் விடுவதாக கூறி வாகனங்களில் அழைத்து சென்றனர்.
வழியில், சிறுமியை ஆள் அரவமற்ற இடத்துக்கு அழைத்து சென்று ஆகாஷ் மற்றும் அசோக் வலுக்கட்டாயமாக அவரது பைஜாமா ஆடையை களைந்தனர். அதுமட்டுமின்றி, பலாத்காரம் செய்யவும் முயன்றனர்.
சிறுமியின் அலறலைக் கேட்டு அப்பகுதியினர் வந்ததை அடுத்து, அவர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரைத் தொடர்ந்து, ‘இது பலாத்கார முயற்சி. குற்றவாளிகள் இருவர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கலாம்’ என, காஸ்கஞ்ச் நீதிமன்றம் 2023ல் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து இருவரும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், இது பாலியல் பலாத்காரத்துக்கான முன்முயற்சி எனக் கூறி இருவரையும் விடுதலை செய்ய கடந்தாண்டு உத்தரவிட்டது. இது குறித்து மூத்த வழக்கறிஞர் ஷோபா குப்தாவின் கடிதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை விசாரிக்க முடிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:
சிறுமியின் மார்பகங்களை பிடிப்பதும், ஆடையை வலுக்கட்டாயமாக களையச் சொல்லி கட்டாயப்படுத்துவதும், பலாத்கார முயற்சி ஆகாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது ஏற்கத்தக்கதல்ல.
பலாத்காரம் செய்ய முயன்றவர்கள், அதற்கான முயற்சியாக மேற்கூறிய செயல்களில் ஈடுபட்டுள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதும், அரசு தரப்பு சாட்சிகள் வாயிலாக உறுதியாகிறது.
எனவே, இந்த வழக்கில், காஸ்கஞ்ச் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு செல்லும்; கடந்தாண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லாது. குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். – இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நிபுணர்கள் குழு பாலியல் குற்ற வழக்குகளை கையாளும் நீதிபதிகளின் அணுகுமுறைக்கு உரிய வழிகாட்டுதல்களை உருவாக்க நிபுணர்கள் குழுவை அமைக்க தேசிய நீதித் துறை அகாடமிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வு கூறுகையில், ‘நாடு முழுதும் பல்வேறு பாலியல் குற்ற வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இது தொடர்பான உத்தரவை வழங்கும் நீதிபதிகள் பல்வேறு அணுகுமுறையை கையாளுகின்றனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை. எனவே, இதுபோன்ற வழக்குகளில் நீதிபதிகள் உரிய அணுகுமுறையை கடைப்பிடிக்க விதிகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக, பல்வேறு நிபுணர்கள் அடங்கிய குழுவை தேசிய நீதித்துறை அகாடமி அமைக்க வேண்டும்’ என, உத்தரவிட்டது.