இலங்கையில் கடல்சார் போதைப்பொருள் கடத்தல்: புதிய சட்டத் திருத்தம் கைதுகளுக்கு வழிவகுக்கும்.

by Amizhthu

இலங்கையின் கடற்பரப்புக்குள் போதைப்பொருட்களை கொண்டு வந்து விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டதன் பின்னர் சர்வதேச கடற்பரப்புக்குள் செல்பவர்களை கைது செய்யும் சட்ட வழிமுறை காணப்படவில்லை.

இதனை கருத்திற் கொண்டு நஞ்சுகள்,அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்தத்துக்கு அமைய இனி இலங்கையின் சட்டத்துக்கு அமைய கடல் மார்க்கம் ஊடாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய முடியும், சட்ட நடவடிக்கைகளை இலங்கையின் நீதிமன்றங்கள் ஊடாக முன்னெடுக்க முடியும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19-02-2026) நடைபெற்ற நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

போதைப்பொருள் ஒழிப்புக்கு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக பல சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், புதிதாக சட்டங்கள் பல விரைவில் இயற்றப்படும். 2024 ஆம் ஆண்டை காட்டிலும் 2025 ஆம் ஆண்டு பெருந்தொகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டு 1821 கிலோகிராம் ஹெரோயின், 3865 கிலோகிராம் ஐஸ் , 17189 கிலோகிராம் கஞ்சா என்ற அடிப்படையில் போதைப்பொருட்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் கடற்பரப்புக்குள் போதைப்பொருட்களை கொண்டு வந்து விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டதன் பின்னர் சர்வதேச கடற்பரப்புக்குள் செல்பவர்களை கைது செய்யும் சட்ட வழிமுறை காணப்படவில்லை. இதனை கருத்திற் கொண்டு நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச் ) சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தத்துக்கு அமைய இனி இலங்கையின் சட்டத்துக்கு அமைய கடல் மார்க்கம் ஊடாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய முடியும், சட்ட நடவடிக்கைகளை இலங்கையின் நீதிமன்றங்கள் ஊடாக முன்னெடுக்க முடியும்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளவரை நோயாளியை போன்றே பார்க்க வேண்டும். அவரை குணப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புனர்வாழ்வு நடவடிக்கைகளை வினைத்திறனாக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை பல வழிமுறைகளில் மேற்கொண்டுள்ளோம். போதைப்பொருள் விநியோகத்தை இல்லாதொழிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

போதைப்பொருள் வியாபாரத்துக்கும், பாதாளக்குழுக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. கடந்த காலங்களில் பாதாளக்குழுக்களை போசித்தவர்கள் இன்று பாதாளக்குழுக்களை ஒழிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.பதற்றமடைய வேண்டாம். பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் வெகுவிரைவில் மேலும் பலர் கைதாகுவார்கள் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம்.

You may also like

Leave a Reply