திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் அவருக்கு சிவப்பு கம்பளம் மற்றும் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு கோவிலில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோவிலில் பல்வேறு இடங்களில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டன. கோவில் சார்பில் அனைத்து மண்டபங்களிலும் வாட்டர் வாஷ் உட்பட தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கோவில் துாண்களில் உள்ள சுவாமி கற் சிலைகளில் எண்ணெய்காப்பு சாத்துப்படி செய்யப்பட்டது. கோவில் வாசல் முதல் மூலஸ்தானம் வரை சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலுக்கு வந்த பிரதமர் மோடி , வாசலில் கூடியிருந்தவர்களை நோக்கி கையசைத்தார்.இதன் பிறகு, அவர், கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். பிரதமர் மோடி சுவாமிதரிசனத்திற்கு பிறகு மாலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
