பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்: வோல்கர் டேர்க்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (23-02-2026) ஆரம்பமாகி, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின்போது, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல், எனும் தீர்மானத்தை மேலும் இரு வருடகாலத்துக்கு காலநீடிப்பு செய்து நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அதன்பிரகாரம் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்துமூல அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 63 ஆவது கூட்டத்தொடரிலும், விரிவான அறிக்கை அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 66 ஆவது கூட்டத்தொடரிலும் சமர்ப்பிக்கப்படும்.

இந்நிலையில் கூட்டத்தொடரில் கடந்த புதன்கிழமை (25) நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இலங்கை சார்பில் உரையாற்றிய ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சுமித் தஸநாயக்க, இன்னமும் தீர்வுகாணப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் உள்ளகக்கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருப்பதுடன், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (27) உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான அறிக்கை பேரவையில் முன்வைக்கப்பட்டது.

அவ்வறிக்கையில் இலங்கை குறித்து பிரஸ்தாபித்த உயர்ஸ்தானிகர், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதுடன் புதிதாக உருவாக்கப்படும் சட்டம் மனித உரிமைகள் சட்டத்துக்கு ஏற்புடையவாறு அமைவதை உறுதிப்படுத்துவதற்கு சிவில் சமூகத்துடன் இணைந்து பணியாற்றுமாறும் வலியுறுத்துகிறேன் எனக் தெரிவித்தார்.

அத்தோடு கடந்த ஆண்டு மனித உரிமைகளை மேம்படுத்துவதை முன்னிறுத்தி இலங்கை, பங்களாதேஷ், கொலம்பியா, சிலி உள்ளடங்கலாக 35 க்கும் மேற்பட்ட நாடுகளின்அரசாங்கங்களுடன் தனது அலுவலகம் பணியாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள். – இலண்டனில் மாபெரும் கவனஈர்ப்புப் பரப்புரை!

இந்திய–இலங்கை ஒப்பந்தமும் இறையாண்மை நெருக்கடியும் (1987–1990) (பாகம் 3)

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.