ரவிகரன் எம்.பி அணை கட்டுமானம் மற்றும் கால்வாய் புனரமைப்பு குறித்து ஆய்வு செய்தார்.

by
0 comments

வவுனியா – ஓமந்தை கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட பெரியவிளாத்திக்குளம் கமக்கா அமைப்பின் கீழ் காணப்படும் புல்மோட்டை வயல்வெளிக்கு நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் புல்மோட்டை வெளிக்கான அணைக்கட்டை அமைத்தல் மற்றும் வாய்க்கால் சீரமைப்புத் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

வவுனியா – ஓமந்தை, பெரியவிளாத்திக்குளம் பகுதியில் கடந்தவருடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் மக்கள் குறைகேள் சந்திப்பொன்று நடாத்தப்பட்டிருந்தது. இதன்போது புல்மோட்டை வயல்வெளிக்கான அணைக்கட்டு அமைப்பது தொடர்பிலும், வாய்க்காலை சீரமைப்பதுதொடர்பிலும் இதன்போது அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 13.02.2026அன்று இடம்பெற்ற வவுனியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் குறித்த புல்மோட்டை வெளிக்கான அணைக்கட்டை அமைக்குமாறும், நீர்ப்பாசன வாய்க்கால் சீரமைப்பை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரால் வலியுறுத்தப்பட்டதையடுத்து கூடியவிரைவில் உரிய திட்டங்களில் உள்வாங்கப்பட்டு குறித்த புல்மோட்டை வெளிக்குரிய அணைக்கட்டை அமைக்கவும், நீர்ப்பாசன வாய்க்காலைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென வவுனியா பிரதேசசெயலாளர் மற்றும் ஓமந்தை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரால் பதில் வழங்கப்பட்டிருந்தது.

banner

இதன் தொடர்சியாக கடந்த 26.02.2026அன்று குறித்த புல்மோட்டைவெளிப்பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் புல்மோட்டைவெளி அணைக்கட்டு அமைக்கவேண்டிய இடத்தைப் பார்வையிட்டதுடன், சீரமைக்கவேண்டிய நீர்ப்பாசன வாய்க்காலையும் பார்வையிட்டார். அத்தோடு பெரியவிளாத்திக்குளம் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடி நிலமைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

அந்தவகையில் தமது கோரிக்கை கடந்த 13.02.2026அன்று இடம்பெற்ற வவுனியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் குறித்த அணைக்கட்டு அமைப்பது தொடர்பிலும், நீர்ப்பாசன வாய்க்கால் சீரமைப்புத் தொடர்பிலும் உரியதரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தமைக்காக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுக்கு கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளாலும், விவசாயிகளாலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினரால் வவுனியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் குறித்த அணைக்கட்டு அமைத்தல், வாய்க்கால் சீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்ட பிற்பாடு ஓமந்தை கமநல சேவைநிலயத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் வருகைதந்து புல்மோட்டை வெளிக்கான அணைக்கட்டு அமைப்பது தொடர்பில் மதிப்பீட்டு ஆய்வுகளை மேற்கொண்டதாக விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டதுடன், தமது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் ஓமந்தை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு இதன்போது தொலைபேசி அழைப்பெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நிலைமைகள் குறித்து கேட்டறிந்ததுடன், குறித்த அணைக்கட்டை அமைப்பதற்கான மதிப்பீட்டறிக்கை தயாரிக்கும் செயற்பாடு முழுமைப்படுத்தப்பட்ட பிற்பாடு தம்மிடமும் குறித்த அணைக்கட்டை அமைப்பதற்கான மதிப்பீட்டறிக்கையினைக் கையளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும் குறித்த விடயங்கள் தொடர்பில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் இதன்போது விவசாயிகளிடம் நாடாளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00