நேபாளத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராப்பர் பாலேந்திர ஷா வெற்றி பெற்றார்.

Rapper Balendra Shah

நேபாளத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில், ‘ராப்’ இசை பாடகராக இருந்து, அரசியல்வாதியாக மாறிய பாலேந்திர ஷா தலைமையிலான ஆர்.எஸ்.பி., எனப்படும் தேசிய சுதந்திர கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

நேபாளத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 26ல், சமூக ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இது, அந்நாட்டு இளைஞர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அரசின் இந்த முடக்கம், ஏற்கனவே அங்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் ஊழல், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் அனுபவிக்கும் சொகுசு வாழ்க்கை ஆகியவற்றுக்கு எதிராக திரும்பியது. அந்நாட்டு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தாங்களாகவே ஒருங்கிணைந்து அரசுக்கு எதிரான போராட்டத்தை கையிலெடுத்தனர்.

தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மைதிகர் மண்டலா என்ற பகுதியில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு பார்லிமென்ட் நோக்கி பேரணி நடத்தினர். போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினரை அரசு அனுப்பியது. இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, போராட்டம் வன்முறையாக மாறியது.

அரசு கட்டடங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகள் தீக்கிரையாகின. வன்முறையை தடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 76 பேர் உயிரிழந்தனர். இளைஞர்களின் எழுச்சியைக் கண்ட பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு பதவியை ராஜினாமா செய்தது. இதையடுத்து, அந்நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி சுசீலா கார்கி தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது.

புதிய இடைக்கால அரசு பதவியேற்ற உடன், சமூக வலைதளங்கள் மீதான தடையை நீக்கியது. இந்நிலையில், அந்நாட்டின் பார்லிமென்ட்டுக்கான பொதுத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், நேபாள காங்கிரசைச் சேர்ந்த ஷேர் பஹதுார் துாபா, நேபாள கம்யூ., – மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் தலைவரும் முன்னாள் பிரதமருமான சர்மா ஒலி, நேபாள கம்யூ., – மாவோயிஸ்ட் தலைவர் புஷ்ப கமல் பிரசண்டா ஆகியோர் களம் இறங்கினர்.

அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களை எதிர்த்து, 35 வயதான, ‘ராப்’ இசை பாடகர் பாலேந்திர ஷா, ஆர்.எஸ்.பி., எனப்படும் தேசிய சுதந்திர கட்சி சார்பில் போட்டியிட்டார்.

ஓட்டுப்பதிவு முடிந்து நேற்று முன்தினம் இரவு துவங்கிய ஓட்டு எண்ணிக்கை, நேற்று முழுதும் தொடர்ந்தது. இதில், பாலேந்திர ஷா தலைமையிலான ஆர்.எஸ்.பி., முன்னிலை வகிக்கிறது. நேபாளத்தில் மொத்தமுள்ள 275 தொகுதிகளில், 165 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.

மீதமுள்ள, 110 தொகுதிகளுக்கான எம்.பி.,க்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் நியமிக்கப்படுவர். நேற்றிரவு நிலவரப்படி, பாலேந்திர ஷா தலைமையிலான ஆர்.எஸ்.பி., கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி உள்ளது. 110 இடங்களுக்கு மேல் அவர்கள் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

காத்மாண்டுவின் முன்னாள் மேயரான பாலேந்திர ஷா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை, அவரது சொந்த தொகுதியான ஜாப்பா 5ல் பின்னுக்கு தள்ளி பெரும்பான்மை வகிக்கிறார்.

அந்நாட்டின் முக்கிய கட்சிகளான நேபாள காங்கிரஸ் 10 இடங்களிலும், சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் 10 இடங்களிலும், பிரசண்டாவின் என்.சி.பி., எனப்படும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி எட்டு இடங்களிலும் மட்டுமே முன்னிலையில் உள்ளன.

பாலேந்திர ஷா, நேபாள இளைஞர் புரட்சிக்கு நேரடியாக தலைமை தாங்கவில்லை என்றாலும், காத்மாண்டு மேயராக இருந்த அவர், இளைஞர்களின் போராட்டத்துக்கு தன் முழு ஆதரவை தெரிவித்திருந்தார். இது, இளைஞர்களிடையே அவருக்கு மிகப்பெரிய செல்வாக்கை ஏற்படுத்தியது.

Related posts

உலக பெண்கள் தினம் மார்ச் 8

உரிமைகள் மறுக்கப்பட்ட தமிழீழப் பெண்கள் 

“திருவையாறு : 1000 பேர்”