திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.

இக்கோவிலில் இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை சனிப் பெயர்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும். சனீஸ்வரர் நேற்று காலை 8:24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்தார்.

அதனையொட்டி, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சனீஸ்வரருக்கு பால், சந்தனம், தேன், பன்னீர், இளநீர், நல்லெண்ணெய் உள்ளிட்ட 32 திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சனி பகவானுக்கு வைர அங்கி கவசம் அணிவித்து சகஸ்ர நாம அர்ச்னை செய்யப்பட்டது.

காலை 8.24 மணிக்கு மங்களவாத்தியங்கள் முழங்க, மகா தீபாராதனையுடன் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்தார். பின், வசந்த மண்டபத்தில் தங்க காகம் வாகனத்தில் சனிபகவானுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.

சனிப்பெயர்ச்சியையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலில் குவிந்த பக்தர்கள், தோஷங்கள் நீங்க வேண்டி நேர்த்திக்கடனாக மொட்டை அடித்தும், கோவிலின் எதிரில் உள்ள நளன் குளித்தில் நீராடி, கலிதீர்த்த விநாயகரை வணங்கி, சிதர் தேங்காய் உடைத்து சுவாமியை வணங்கினர்.

சனிப் பெயர்ச்சி பூஜையில், புதுச்சேரி கவர்னர் கைலாசநாதன், தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமி, அமைச்சர் திருமுருகன், முன்னாள் அமைச்சர் சாய்சரவணன் குமார், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ராஜசேகரன், சிவா, டி.ஜ.ஜி., சத்தியசுந்தரம், கலெக்டர் இஷிதா ரதி, கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

உரிமைகள் மறுக்கப்பட்ட தமிழீழப் பெண்கள் 

“திருவையாறு : 1000 பேர்”

கேப் டவுன் ‘குற்றச் சுவர்’: நவீன பிரிவினை என மக்கள் கொந்தளிப்பு