9 மாவட்டங்களில் நன்னீர் மீன்பிடி படகுகள் பழுதுபார்க்கும் பணி நிறைவடைந்தது!

by
0 comments

திட்வா புயலால் நாடு முழுவதிலும் உள்ள மீனவ சமூகத்தின் மீன்பிடிக் கலன்கள் மற்றும் உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆறு (06) மாதங்களுக்குள் முழுமையாக வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்காக கடற்றொழில் அமைச்சு துரித வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. அமைச்சின் கீழ் இயங்கும் சீ-நோர் (Cey-Nor) மன்றம் மற்றும் நோர்த் சீ (North Sea) நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

அழிவடைந்த மீன்பிடிப் படகுகளைத் திருத்தியமைத்தல் மற்றும் புதிதாக உற்பத்தி செய்யும் பொறுப்பு சீ-நோர் நிறுவனத்திற்கும், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை வழங்கும் பொறுப்பு நோர்த் சீ நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த இரு நிறுவனங்களின் தலைவரான திரு. அஜித எதிரிசிங்க தெரிவித்தார். கடற்றொழில் திணைக்களம் மற்றும் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA) ஆகியவற்றுடன் இணைந்து, கடல் மற்றும் நன்னீர் மீன்பிடி இறங்குதுறைகளை உள்ளடக்கியதாக, முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த படகுகள் தொடர்பான சரியான மதிப்பீடு ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முற்றாக அழிவடைந்த 19 1/2 அடி படகுகள் மற்றும் தோணிகளைப் புதிதாக உற்பத்தி செய்யும் பணிகள், கொழும்பு முகத்துவாரம் மற்றும் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட யாழ்ப்பாணம் காரைநகர் ஆகிய படகு கட்டும் தளங்களில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் துரித உற்பத்திச் செயற்பாட்டிற்காக, பைபர் கிளாஸ் (Fiberglass) தொழில்நுட்பத்தில் போதிய அனுபவம் வாய்ந்த, ஓய்வுபெற்ற கடற்படை மற்றும் முப்படை அதிகாரிகளின் சேவையும் தற்காலிக அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே நூற்றுக்கணக்கான புதிய தோணிகள் மற்றும் பெருமளவிலான படகுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

விசேடமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்நாட்டு நீர்த்தேக்கங்களை அண்டிய நன்னீர் மீன்பிடித் தொழிலைச் சேர்ந்த, பகுதியளவில் சேதமடைந்த பெருமளவிலான தோணிகள், 9 மாவட்டங்களை உள்ளடக்கியதாகத் திருத்தியமைக்கப்பட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

அத்தரவுகளின்படி

  • கிளிநொச்சி மாவட்டத்தில் 55 தோணிகள்*
  • முல்லைத்தீவு மாவட்டத்தில் 36 தோணிகள்*
  • அனுராதபுரம் மாவட்டத்தில் 29 தோணிகள்*
  • அம்பாறை மாவட்டத்தில் 26 தோணிகள்*
  • மன்னார் மாவட்டத்தில் 16 தோணிகள்*
  • பொலன்னறுவை மாவட்டத்தில் 15 தோணிகள்*
  • திருகோணமலை மாவட்டத்தில் 10 தோணிகள்*
  • வவுனியா மாவட்டத்தில் 05 தோணிகள்*
  • மட்டக்களப்பு மாவட்டத்தில் 47 தோணிகள்*

என்றடிப்படையில் வெற்றிகரமாகத் திருத்தியமைக்கப்பட்டு மீனவ மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக, குருநகர் மற்றும் சிலாபம் போன்ற பிரதேசங்களில் விசேட முகாம்கள் அமைக்கப்பட்டு, ஏனைய படகுகளைத் திருத்தியமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை 6 மாதங்களுக்குள் முழுமையாக வழமை நிலைக்குக் கொண்டு வந்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதே தமது நிறுவனங்களின் பிரதான இலட்சியம் எனத் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00