கோவையில் பெண் காவல் அதிகாரியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எஸ்.பி கைது!

கோவை புதூரில் சிறப்பு போலீஸ் படை பிரிவு செயல்படுகிறது. கமாண்டன்ட் ஆக எஸ்.பி., ரேங்க் அதிகாரி செந்தில்குமார் பதவி வகித்தார். சமீபத்தில் பயிற்சிக்கு வந்த ஒரு பெண் போலீசிடம் தகாத முறையில் செந்தில்குமார் நடந்துகொண்டதாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட பெண் போலீஸ், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் விசாரணைக்குழுவிடம் புகார் அளித்தார்.

கமாண்டண்ட் செந்தில்குமார் மீது பெண் போலீஸ் கூறிய புகார் படி தமிழக அரசு, அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. புகார் மீதான விசாரணை முடியும் வரை சென்னையில் உள்ள தமிழக சிறப்பு போலீஸ் படை தலைமையகத்தில் செந்தில்குமார் தங்கியிருக்க வேண்டும்; அரசு அனுமதி பெறாமல் வெளியூர்களுக்கோ வெளிநாட்டுக்கோ செல்லக்கூடாது எனவும் தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டு இருந்தார்.

விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த எஸ்.பி. செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். பாலியல் புகாரில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அன்புமணி அறிக்கை: இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி, ”வேலியே பயிரை மேய்ந்தால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு ஏது? பெண்கள் உள்ளிட்ட மக்களைக் காக்க வேண்டிய போலீஸ் அதிகாரிகளே பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது கண்டிக்கத்தக்கது” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

மேலும், ”தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டன. இதற்கு காரணம் திமுக அரசின் செயலற்ற தன்மையும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கட்டுப்படுத்தப்படாததும் தான். இதற்கெல்லாம் காரணமான திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்” என அன்புமணி கூறியுள்ளார்.

Related posts

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதன்படி “ரூ.50 ஆயிரம்” வரை மட்டுமே பொதுமக்கள் பணம் கையில் எடுத்துச் செல்ல முடியும்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை; விறகு அடுப்புகளுக்கு மாறும் சூழ்நிலை!