டில்லியில் இருந்து பெங்களூருக்கு வரும், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில், பயணி ஒருவர் போதை பொருள் கடத்தி வருவதாக, டி.ஆர்.ஐ., எனும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் இரவு, அந்த ரயில், பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திற்கு வந்ததும், ரயிலில் ஏறிய அதிகாரிகள், பயணியர் உடைமைகளை சோதனைக்கு உட்படுத்தினர்.
ஒரு பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது பைகளில் சோதனை நடத்திய போது, போதை பொருள் சிக்கவில்லை. ஆனால் நாய்களுக்கு உணவு வழங்கும் பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகளை அதிகம் வைத்திருந்ததால், அவர் மீது சந்தேகம் வலுத்தது.
அந்த பாக்கெட்டுகளை பிரித்து பார்த்த போது, பொட்டலங்களில் போதை பொருட்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 9 கிலோ எடையுள்ள மெத் – ஆம் பெட்டமைன், மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு, 9 கோடி ரூபாய் ஆகும். பயணி கைது செய்யப்பட்டார்.
அவர் கொடுத்த தகவலின்படி, பெங்களூரில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 40 டெபிட் கார்டுகள், 70 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான, மூன்று பேரும் போதை பொருள் கடத்தும் வலையமைப்பில் இருப்பதுடன், ஹவாலா பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டு இருக்கலாம் என்றும், அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.