திருவள்ளூர் அருகே கல்லுாரி கட்ட ஒரு குடும்பம் தானமாக வழங்கிய நிலத்தை, டான் போஸ்கோ சலேசியன்ஸ் அமைப்பு, தனி நபர்களுக்கு 14 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக, கத்தோலிக்க சிறுபான்மை நலச்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் ஜூலியட் மற்றும் ஆல்பர்ட் குடும்பத்தினர், பன்னுார் அருகே, 10 கோடி ரூபாய் மதிப்பிலான, 8 ஏக்கர் 51 சென்ட் நிலத்தை, டான்போஸ்கோ சலேசியன்ஸ் அமைப்புக்கு, 2013 ஜூலை 24ல் தானமாக கொடுத்தனர்.
ஏழை, எளிய மாணவர்களின் படிப்புக்காக, இன்ஜி., கல்லுாரி அமைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நிலம் தானம் தரப்பட்டது. அதே ஆண்டு, ஆக., 13ல், வெளிநாடுகளில் உள்ள குடும்பத்தினர் தமிழகம் வந்து, குறிப்பிட்ட இடத்தில் கல்லுாரி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றனர்.
நிலம் தானமாக பெறப்பட்ட நிலத்துக்கான, நிபந்தனைகள் தொடர்பான ஆவணங்கள், 2013 ஆக., 20ல் கையெழுத்தாகின. ஆனால், அந்த நிபந்தனைகள், அந்த குடும்பத்தினருக்கு தெரியாமல் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நிலத்துக்கான பவர் ஆப் அட்டர்னியை, அதேநாளில், தனிநபர் ஒருவருக்கு வழங்கியதாகவும் கூறப் படுகிறது. இந்த குறிப்பிட்ட நபர், நிலத்தை பகுதி, பகுதியாக பிரித்து, 14 கோடி ரூபாய் வரை விற்றதாக கூறப்படுகிறது. இந்த விபரம் அறித்து, தானம் கொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, கத்தோலிக்க சிறுபான்மை நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.ஜெசுராஜ், நிர்வாக தலைவர் பெர்னாண்டோ, செயலர் ஜோசப் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
கத்தோலிக்க சிறுபான்மை நலச்சங்கம், தமிழகத்தில் உள்ள கத்தோலிக்க சிறுபான்மை மக்களின், உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்கிறது.
கடந்த 2013ல், திருவள்ளூர் மாவட்டம், பண்ணுாரில் உள்ள ஒரு குடும்பம், இன்ஜி., கல்லுாரி அமைப்பதற்காக, டான் போஸ்கோ சலேசியன்ஸ் அமைப்பிற்கு தானமாக வழங்கிய நிலத்தை, தனிநபருக்கு விற்றுள்ளனர். இதற்கு, டான்போஸ்கோ சலேசியன்ஸ் தலைமை பதில் அளிக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை – மயிலாப்பூர் பேராயர், இந்தியாவுக்கான அமைப்பின் துாதர் ஆகியோருக்கு புகார் அனுப்பியுள்ளது. இதற்கு, அவர்கள் ஏழு நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்.
தானம் வழங்கியவரின் நிபந்தனையை நீக்கீயது யார்; நிலத்தை விற்றது யார் என்பது குறித்து, இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமில் உள்ள சலேசியன் சபை தலைமை பேராயர் உரிய விசாரணை நடத்த வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு, தற்போது 60 முதல் 90 வயது வரை ஆகிறது. அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை, கத்தோலிக்க சிறுபான்மை நலச்சங்கம், அனைத்து வழிகளிலும் நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.