மாதவரம் பால் பண்ணையில் ஒப்பந்த பணியாளர்கள் பற்றாக்குறையால், பால் பாக்கெட் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரம்பூர், கொளத்துார்,திரு.வி.க.நகர், வியாசர்பாடி, கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட வடசென்னையின் பல பகுதிகளில், ஆவின் பால் வினியோகம் முடங்கியது.
சென்னை, மாதவரம் ஆவின் பால் பண்ணையில், தினமும் 4 லட்சம் லிட்டர் முதல் 4.5 லட்சம் லிட்டர் வரை பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து, 45க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், லாரிகள் வாயிலாக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு, பால் பாக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பண்ணையில் தயாராகும் பால் பாக்கெட்டுகளை லாரியில் ஏற்றுவதற்காக, ஆவின் நிர்வாகம், தனியார் நிறுவனம் வாயிலாக, ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தி உள்ளது.
அந்த வகையில், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வெளி வரும் பால் பாக்கெட்டுகளை, தள்ளுவண்டி வாயிலாக கொண்டு வருவது, அவற்றை டப்புகளில் அடுக்குவது, அவற்றை லாரிகளில் ஏற்றுவது என, பல்வேறு பணிகளை, ஒப்பந்த பணியாளர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாதவரம் பால் பண்ணையில், தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம், கடந்த மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், சோழிங்கநல்லுார் பால் பண்ணையில், தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் எடுத்துள்ள ஒப்பந்ததாரருக்கு, மாதவரம் பால் பண்ணைக்கான ஒப்பந்தமும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்ததாரரால், மாதவரம் பால் பண்ணை பணிக்கு தேவையான, தொழிலாளர்களை அனுப்ப இயலாமல், வெறும் எட்டு பேரை மட்டுமே அனுப்பி உள்ளார்.
கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு வராததால், எட்டு தொழிலாளர்களை மட்டுமே கொண்டு, மாதவரம் பால் பண்ணை இயங்கி வருகிறது. பால் முகவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆவின் பால் தங்கு தடையின்றி வினியோகம் செய்ய வேண்டும் என, மொத்த வினியோகஸ்தர்களின் வாகன ஓட்டுநர்களும், வாகன உதவியாளர்களும், பாக்கெட்டுகளை பால் டப்புகளில் அடுக்கி உள்ளனர்.
தொழிலாளர்கள் பற்றாக்குறையை சரி செய்ய ஆவின் நிர்வாகம் தரப்பிலிருந்தும், ஒப்பந்ததாரர் தரப்பிலிருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால், ஒப்பந்த தொழிலாளர்கள் செய்ய வேண்டிய பணிகளை, தங்களால் செய்ய முடியாது என, மொத்த வினியோகஸ்தர்களின் வாகன ஓட்டுநர்கள் தெரிவித்துவிட்டனர்.
இதனால், நேற்றைய தினம் மாதவரம் பால் பண்ணையில் இருந்து வினியோகம் செய்யப்பட வேண்டிய ஆவின் பால் வினியோகம், 60 சதவீதத்துக்கும் மேல் முடங்கியது. இதனால், பொதுமக்களுக்கு ஆவின் பால் வினியோகம் செய்ய முடியாமல் பால் முகவர்களும், ஆவின் பால் கிடைக்காமல் வடசென்னை பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இப்பிரச்னை காரணமாக, நேற்று வட சென்னையில், பெரம்பூர், கொளத்துார், திரு.வி.க.நகர், வியாசர்பாடி, கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில், ஆவின் பால் வினியோகம் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, ஆவின் பால் மொத்த வினியோகஸ்தர்களின் வானக ஓட்டுநர்கள் சிலர் கூறியதாவது: மாதவரம் பால் பண்ணையில், லாரிகளில் பால் பாக்கெட்டுகளை ஏற்றும் பணிக்கு, ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாதவரத்தில் மட்டும், சுழற்சி முறையில் 150 பேர் பணி செய்து வந்தனர்.
தற்போது, ஒப்பந்ததாரர் மாறியதால், எட்டு பேர் மட்டுமே பணி செய்கின்றனர். இதனால், பால் பாக்கெட்டுகளை லாரியில் ஏற்றுவதற்கு தாமதம் ஆகிறது. எனவே, வேறு வழியின்றி நாங்களே டப்புகளை அடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.