சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2026!
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசானது வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாளானது 18.05.2026 திங்கள் அன்று பேர்ண் பாராளுமன்ற முன்றலில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் மழையினையும் பொருட்படுத்தாது பல நூற்றுக்கணக்கில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் கனத்த இதயங்களுடன் வலி சுமந்த நினைவுகளை நெஞ்சினில் சுமந்து கலந்து கொண்டிருந்தனர்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் நடாத்தப்பெற்ற இக் கவனயீர்ப்பு நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன், சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன. தொடர்ந்து பொதுக்குறியீட்டு வணக்கப்படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலர்மாலை அணிவிக்கப்பெற்றது. மக்களால் சுடர், மலர்வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில் வணக்கப்பாடலும் வழங்கப்பெற்றன.
இக் கவனயீர்ப்பு நிகழ்வில் இனஅழிப்பு சார்ந்த துண்டுப்பிரசுரங்களும் இளையோர்களால் விநியோகிக்கப்பட்டதுடன், யேர்மன், பிரெஞ்சு, இத்தாலி மொழிகளிலான பேச்சுக்கள், நினைவுரையும் நிகழ்த்தப்பட்டன..
முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிநாட்களில் எமது உறவுகள் பல சிரமங்களுக்கு மத்தியிலும் தமது பசியாற ஒருநேர உணவுக்கு வழியின்றி உப்பு, பால் இல்லாத கஞ்சி உட்கொண்டு பசியாறியதை நினைவுகூரும் நோக்கில் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு கஞ்சி வழங்கப்பெற்றது.
நிகழ்வில் தமிழின அழிப்பு சார்ந்த, தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் வகையிலான பதாதைகளைத் தாங்கிய சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் தமது உணர்வுகளை ஆற்றாமையோடு வெளிப்படுத்தியதோடு நாம் அனைவரும் ஒற்றுமையாக தாயகம் நோக்கி தொடர்ந்து பயணிப்போம் என்ற உறுதிமொழியுடன் நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து சுவிஸ் நாட்டின் கொடியுடன் தமிழீழத் தேசியக்கொடியும் கையேற்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் “வலிகளிலிருந்து வலிமை பெறுவோம்! உறுதி கொள்வோம்! உரிமை மீட்போம்!” என்ற உணர்வுடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு












































