உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரயிலை, ஹரியானாவின் ஜிந்த் – சோனிபட் இடையே பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிலக்கரி, டீசல் இன்ஜின்களுக்கு மாற்றாகவும், கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் நோக்கிலும், ‘ஹைட்ரஜன்’ ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. சோதனை ஓட்டம் இந்த வகை ரயில் இன்ஜினை தயாரிக்கும் முயற்சிகள் கடந்த 2021ல் தொடங்கின. இந்த திட்டத்தை 136 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வடக்கு மண்டல ரயில்வே, 2022ல் தொடங்கியது. இதையடுத்து, தமிழகத்தின் சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., எனப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலையில், அதிநவீன ஹைட்ரஜன் ரயில் உருவாக்கப்பட்டது.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரயில், கடந்தாண்டு ஆகஸ்டில் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள ரயில்வே துறையின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பின் சிறப்பு குழுவின் மேற்பார்வையில், இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை, ஹரியானாவின் ஜிந்த் – சோனிபட் இடையே பிரதமர் மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். உந்து சக்தி ஜிந்த் நகரில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமருடன், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஹரியானா கவர்னர் அசிம் குமார் கோஷ், முதல்வர் நயாப் சிங் சைனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் முதல் ரயில், மஹாராஷ்டிராவின் மும்பை – தானே இடையே இயக்கப்பட்ட வரலாறு அனைவரும் அறிவோம். அந்த வரிசையில், நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் குறித்த செய்தி வரும் போது, ஹரியானா, ஜிந்த், சோனிபட் ஆகியவற்றின் பெயர்கள் இடம்பெறுவதை தவிர்க்க முடியாது. டீசல் மற்றும் மின்சார ரயில்களின் காலமாக 20ம் நுாற்றாண்டு திகழ்ந்தது. 21ம் நுாற்றாண்டில் ரயில்கள் ஹைட்ரஜன் வாயிலாக இயக்கப்படுகின்றன.
ஹைட்ரஜன் ரயில் சேவை, நம் நாட்டிக்கு உந்து சக்தியாக இருக்கும். ரயில் சேவையில் டீசலை மட்டுமே நம்பியிருந்த நிலை மாறியுள்ளது.
ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயிலை இயக்கும் திறன்கொண்ட நாடுகள் நான்கு மட்டுமே உலகில் உள்ளன. தற்போது, அந்த வரிசையில் நம் நாடும் இணைந்துள்ளது. இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த ரயில், உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இது, ரயில்வே மற்றும் தொழில்நுட்ப துறையில் நாட்டின் வளர்ந்து வரும் திறன்களை பிரதிபலிக்கிறது. மேலும், ரயில்வே துறையில் தூய்மையான மற்றும் நிலையான போக்குவரத்து முறையை நோக்கி ஒரு முக்கிய அடியை நாடு எடுத்து வைத்துள்ளது.
மேற்காசிய போர் சூழலுக்கு நடுவே, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நம் நாடு பெருமளவிலான டீசல், சமையல் காஸ் மற்றும் உரங்களை பெற்று வருகிறது. கடந்த மூன்று, நான்கு மாதங்களாக இப்பகுதி தொடர்ந்து போர்க்களமாக மாறி வருகிறது. இந்த சூழலிலும், இந்திய ரயில்வே சேவையும், நாட்டின் வளர்ச்சி பயணமும் தடைபடவில்லை. 2014க்கு முன் இத்தகைய சூழல் ஏற்பட்டிருந்தால், இந்திய ரயில்வேயின் பணிகள் முழுமையாக முடங்கியிருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “முழுமையான ஹைட்ரஜனில் இயங்கும் ரயிலை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டும் என்ற துணிச்சலான முடிவை நாட்டின் தலைமை எடுத்ததாலேயே இது சாத்தியமானது. அந்த தொலைநோக்கு பார்வை இன்று நனவாகியுள்ளது. இந்த சாதனையுடன், முழுமையான ஹைட்ரஜன் உற்பத்தி தொழில்நுட்பத்தை உடைய நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது,” என்றார்.