வெடிமருந்துப் பயிற்சி ஆசிரியர்
வீரவேங்கை இசைவாணன்
கதிரவேல்ப்பிள்ளை கர்னபாலசுந்தரம்பிள்ளை
யாழ். மாவட்டம்
05.05.1971 – 16.05.2009
முள்ளிவாய்க்கால் சமரின் போது 16.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
தமிழீழத்தின் வடமராட்சியில் அமைந்துள்ள துன்னாலை என்னும் ஊரில் கதிரவேலுப்பிள்ளை பாக்கியலட்சுமி இணையருக்கு 05.06.1971 அன்று மகனாகப் பிறந்தவரே இசைவாணன். இவருக்குப் பெற்றோர் இட்டபெயர் கருணபாலசுந்தரம்பிள்ளை. உயர்கல்வியைக் ஹாட்லிக் கல்லாரியில் பயின்று கணிதப்பிரிவிலே சித்திபெற்று யாழ். பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோது, 1990ஆம் ஆண்டு தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்.
அங்கே தனது இரசாயனவியல் அறிவினை மேலும் வளர்த்து, அதன் ஊடாகத் தாய்நாட்டிற்குப் பல சேவைகளை வழங்கினார். அவரது துறைசார் அறிவு காரணமாக 1996 ஆம் ஆண்டு சிறுத்தைப்படையணிக்கு மாற்றப்பட்டார். அங்கு வெடிமருந்துப் பகுதியில் திறமையாகச் செயற்பட்டு அப்பகுதியின் பொறுப்பாளரானார். அதிகம் பேசாமல் அமைதியான சுபாவம் கொண்ட இவர் எல்லோராலும் இசைவாணன் மாஸ்டர் என்று அழைக்கப்பட்டார்.
வெடிமருந்துப் பகுதியின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும் புதிய உத்திகளைக் கையாள்வதற்கும் கேணல் ராயு அவர்களுடன் இணைந்து அயராது பணியாற்றினார். ஜெயசிக்குறு படை நடவடிக்கையின்போது பல கண்ணிவெடித் தாக்குதல்களை களமுனைகளில் நடத்தி ஜெயசிக்குறு தாக்குதல் முறியடிப்பில் பல சாதனைகள் புரிந்த இவர். இச்சமரில் விழுப்புண் அடைந்தார்.
பின்னாளில் சிறுத்தைப் படையணி பொறியியற்றுறையாக மாற்றப்பட்டபோது அங்கு உருவாக்கப்பட்ட மயூரன் வெடிமருந்துப் பயிற்சிக் கல்லூரியைப் பொறுப்பேற்றுத் திறம்பட நடாத்தினார். அக்காலத்தில் போராளிகள் பலருக்கு வெடிமருந்துப் பயிற்சிகளை வழங்கினார். அத்துடன், வெடிமருந்து தொடர்பான பயிற்சி வகுப்புகளும் நடத்தினார். தனது திறமையினால் வெடிமருந்துகள் தொடர்பான தமிழாக்கப் பணியிலும் ஈடுபட்டார்.
இறுதிக்கட்டப் போரின்போது வெவ்வேறுபட்ட களமுனைகளில் எதிர்த்தாக்குதல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது முதுகில் விழுப்புண்ணடைந்தார். அதனால். ஓய்விற்காகக் களமுனையிலிருந்து பின்தளத்திற்குக் கொண்டுவரப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவேளை 16 மே 2009 அன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் எதிரியின் எறிகணை வீச்சில் காயமடைந்து அதே இடத்தில் விழிமூடிக் கொண்டார். அவர் கண்ட கனவு ஒருநாள் நிச்சயம் ஈடேறும்.