தொல்பொருள் சின்னங்களை அகற்றி இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். – அமைச்சர் ஆனந்த விஜேபால

24-11-2025 | கொழும்பு –

வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் தொல்பொருள் அடையாளப்படுத்தல் பெயர் பலகைகள் அகற்றப்பட்டமை குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.

சட்டம் அனைவருக்கும் பொதுவானது. ஒருசிலர் தமக்கு பிராந்தியம் மற்றும் இராச்சியம் இருப்பதாக நினைத்துக் கொண்டு செயற்படுகிறார்கள்.

தொல்பொருள் சின்னங்களை அகற்றி இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். தொல்பொருள் திணைக்களம் நாட்டில் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆகவே இலங்கையில் எவ்விடத்திலும் தொல்பொருள் இடங்களை அடையாளப்படுத்தும் இயலுமை காணப்படுகிறது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24.11.2025) நடைபெற்ற அமர்வின் போது வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் தொல்பொருள் அடையாளப்படுத்தல் பெயர் பலகைகள் அகற்றப்பட்டமை குறித்து விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் அமைக்கப்பட்ட பதாதைகள் அகற்றப்பட்டமை குறித்து விடயங்களை சபைக்கு வெளிப்படுத்துகிறேன். தொல்பொருள் திணைக்களத்தால் வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அடையாளப்படுத்தப்பட்ட தொல்பொருள் பகுதிகளுக்குள் பிரவேசிப்பதை அடையாளப்படுத்தும் வகையில் அமைக்கபட்டிருந்த பெயர் பலகைகள் ஒருசில தரப்பினரால் அகற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிமலை தொல்பொருள் இடத்துக்குச் செல்லும் வீதியை அடையாளப்படுத்தும் திக்கிட்டிபிட்டி சந்தி, பாலச்சேனை, கொடுக்குச்சேனை,சாராவளி ஆகிய இடங்களில்

தொல்பொருள் அடையாளப்படுத்தப்பட்ட பெயர் பலகைகள் 2025.11.22 ஆம் திகதி ஒரு தரப்பினரால் அகற்றப்பட்டுள்ளதாக கிரான் தொல்பொருள் அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவலோக கனான் சிவலோஜினி 2025.11.23 ஆம் திகதியன்று வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் வாழைச்சேனை பிரதேச சபையின் தலைவர் எஸ். சுதாகரன், பிரதி செயலாளர் பத்மநீதன், பிரதேச சபை உறுப்பினர் ஆனந்தி சிவராசன், மற்றும் சுந்தரலிங்கம் ஆகியோர் இந்த பெயர் பலகைகளை அகற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 2025.11.24 ஆம் திகதியன்று நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் குறித்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்தமலை கோயிலுக்கு பிரவேசிக்கும் வீதி, 40 ஆம் இலக்க சந்தி, சாந்தமலை கோயிலுக்கு திரும்பும் சந்தி ஆகிய பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தொல்பொருள் பெயர் பலகைகள் 2025.11.20 ஆம் திகதியன்று அகற்றப்பட்டுள்ளதாக பட்டிபொல பிரதேச செயலாளர் காரியாலயத்தில் தொல்பொருள் பிரிவின் அலுவலர் சுந்தரம் சந்திகரகாந்தன் 2025.11. 23 ஆம் திகதியன்று கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்கு 2025.11.24 ஆம் திகதி (நேற்று) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அத்துடன் சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு பொலிஸ்மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சட்டம் அனைவருக்கும் பொதுவானது. ஒருசிலர் தமக்கு பிராந்தியம் மற்றும் இராச்சியம் இருப்பதாக நினைத்துக் கொண்டு செயற்படுகிறார்கள்.தொல்பொருள் சின்னங்களை அகற்றி இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.

தொல்பொருள் திணைக்களம் நாட்டில் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே இலங்கையில் எவ்விடத்திலும் தொல்பொருள் இடங்களை அடையாளப்படுத்தும் இயலுமை காணப்படுகிறது.

நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. வடக்கு , கிழக்கு , மேற்கு மற்றும் தெற்கு என்று மாகாண அடிப்படையில் வேறுபாடுகள் கிடையாது. தொல்பொருள் சின்னங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பெயர் பலகைகளை அகற்றி இனவாதத்தை தோற்றுவிக்க ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள்.இ னவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இந்த சம்பவம் குறித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply